Tata: ரத்தன் டாடா போல உடை; 'என் அப்பா வேலை பார்த்த இடத்தில் இன்று நான்...' - சாந்தனு உருக்கம்!
இந்தியாவின் முக்கிய நிறுவனமான `டாடா'-வை நிலையாக வழிநடத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த ஆண்டு அக் 9ம் தேதி தனது 86வது வயதில் காலமானார்.
தொழில்துறையில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் டாடா இந்தியர்களின் மனதில் உயர்ந்த மனிதராக நின்றவர். கடைசி காலத்தில் தன்னுடன் 29 வயது `சாந்தனு’-வை டாடா குழுமத்தின் இளம் GM -ஆக வைத்திருந்தார். ரத்தன் டாடாவின் மறைவிற்குப் பிறகு டாடா குழுமம் அவரது சகோதர்களின் கைக்கு மாற, சாந்தனு தனி ஆளாக, அங்கிருக்கும் பாதுகாவலர்களுக்குக் கூட அடையாளம் தெரியாமல் நடந்து சென்றது பலரின் நெஞ்சங்களை உருக்கமடையச் செய்தது. ரத்தன் டாடாவின் மறைவிற்குப் பிறகு `சாந்தனு’ என்ன ஆவார் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வருத்தப்பட்டனர்.
இந்நிலையில் 'டாடா மோட்டார்' நிறுவனத்தின் வியூகம் வகுத்தல், திட்டமிடுதல் பிரிவில் ஜெனரல் மேனஜராகப் பொறுப்பேற்றிருக்கிறார் சாந்தனு. ரத்தன் டாடா சிம்பிளாக நீள நிறச் சட்டை, டார்க் நேவி பேண்ட் என எப்போதும் உடை அணிந்து, தனது ஃபேவரட் நானோ காரில் அலுவலகங்களுக்குச் செல்வார்.
இப்போது அதைப்போலவே சாந்தனுவும் உடை அணிந்து தனது முதல் நாள் அலுவலகத்திற்கு நானோ காரில் செல்லும் புகைப்படத்தைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் சாந்தனு, " 'டாடா மோட்டார்' நிறுவனத்தின் வியூகம் வகுத்தல், திட்டமிடுதல் பிரிவில் ஜெனரல் மேனஜராகப் புதியப் பொறுப்பேற்கப் போகிறேன்.
என் அப்பா வெள்ளை நிறச் சட்டை, நீள நிற பேண்ட்டுடன் டாடா மோட்டர்ஸ்க்கு வேலைக்குச் சென்று வருவார். அவருக்காக நான் வீட்டில் ஜன்னலைப் பார்த்துக் கொண்டே காத்திருப்பேன். நான் 'டாடா மோட்டார்' நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பேற்கும் இந்தத் தருணத்தில் என் அப்பாவின் நினைவுகள் கண்முன் வந்து செல்கிறது. வாழ்கை இப்போது முழுமைப் பெற்றதாக உணர்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.