Telegram: ``நான் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா'' - டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பிரெஞ்சு பத்திரிகையான லு பாயிண்டி செய்தியிடம் அளித்த பேட்டியில், ``எனக்கு மூன்று மனைவிகள். ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டு குழந்தைகள். இவர்கள்தான் என் அதிகாரப்பூர்வ குழந்தைகள். இவர்கள்தான் என்னுடைய $13.9 பில்லியன் சொத்துகளை பிரித்துக்கொள்வார்கள்.
ஆனால், டெலிகிராம் செயலியால் நான் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்களால் அடுத்த முப்பது ஆண்டுக்கு என் குழந்தைகள் இந்த சொத்துகளை பிரித்துக்கொள்ள முடியாது. அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல வாழ்ந்து, தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கைச் சார்ந்திருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.
இவர்கள் தவிர எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள் தெரியுமா?15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பருக்கு உதவுவதற்காக விந்தணு தானம் செய்யத் தொடங்கினேன். அதன் மூலம் எனக்கு 12 நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருத்தரித்ததாக அந்த மருத்துவமனை சமீபத்தில் என்னிடம் தெரிவித்தது. அப்படியானால் நான் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா." என்றார்.