Tiger Love: இணையைச் சந்திக்க 200 கி.மீ பயணித்த சைபீரியன் ஆண் புலி - ஆச்சர்யப்பட்ட வனத்துறை!
ரஷ்யாவில் சைபீரியன் புலி (Siberian Tiger) ஒன்று தனது இணையைக் காண்பதற்காக 200 கிலோமீட்டர் பயணம் செய்த கதை, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. போரிஸ் என்ற புலி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வெட்லயா என்ற புலியை சந்தித்துள்ளது.
புலிகளின் முன்கதை!
இந்த இரண்டு புலிகளும் சிகோட்-அலின் என்ற மலையில் இருந்து பெற்றோர் இல்லாத குட்டிகளாக 2012ம் ஆண்டு மீட்கப்பட்டன. மனிதர்களுடன் அதிகம் தொடர்புகொள்ளாமல் ஒரு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காட்டு விலங்குகளாகவே வளர்க்கப்பட்டன. இதனால் அந்த புலிகளை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் காட்டுக்குள் விட முடியும்.
ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு பிரி-அமுர் என்ற பகுதியில் 2014ம் ஆண்டு விடப்பட்டன. (அமுர் என்பது சைபீரிய புலிகளைக் குறிப்பிடும் மற்றொரு சொல்.)
பொதுவாக புலிகள் தனித்து வாழும் உயிரினங்கள் என்பதால் இரண்டும் பலநூறு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதை பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
200 கிலோமீட்டர் பயணம் செய்த போரிஸ்!
போரிஸ், பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் நினைத்தபடி நடந்துகொள்ள வில்லை. அது வழக்கத்துக்கு மாறாக பயணம் செய்ததை அவர்கள் கண்டுள்ளனர். அது நேராக ஒரே திசையில் தொடர்ந்து நடப்பதைப் பார்த்துள்ளனர்.
போரிஸ் புலி ஸ்வெட்லயாவைச் சந்திக்க அத்தனை தூரம் கடந்திருப்பதைப் பார்த்து அதிகாரிகள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். 200 கிலோ மீட்டர் கடந்து ஸ்வெட்லயாவைச் சந்தித்த 6 மாதத்திலேயே இரண்டு புலிகளும் சில குட்டிகளை ஈன்றுள்ளன.
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் வெற்றி!
சிறையில் வைத்து வளர்க்கப்பட்டாலும் இந்த இரண்டு புலிகளும் நன்றாகவே வேட்டையாடுவதாகவும், குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை தராமல், காட்டு விலங்குகளையே குறிவைத்து சாப்பிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் புலிக்குட்டிகளை பாதுகாப்பாக வளர்த்து மீண்டும் காட்டில் விடுவது சாத்தியம்தான் என்பதை இந்த புலிகள் நிரூபித்திருப்பதாக பெருமிதம் கொள்கின்றனர்.
சைபீரியன் புலிகள் அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ளன. இவற்றை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன.