Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
TN Assembly: `அண்ணா பல்கலை. மாணவி வழக்கு' - கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வரின் ஆவேச உரை!
2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி 3-வது நாளாக நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு இன்று கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். அதைத் தொடர்ந்து கூட்டம் நடந்து வருகிறது.
இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீது கட்சியில் ஒருவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டு சட்டப்பேரவையில் விவாதம் நடந்து வருகிறது.
`பதிவாளரை பணியிடை நீக்கம்..' - பூவை ஜெகன்மூர்த்தி
முதலாவதாகப் பேசிய புரட்சி பாரதம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி,``அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கல்லூரியின் துணை வேந்தர் இல்லாத காரணத்தால், குறைந்தபட்சம் பதிவாளரையாவது பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" எனப் பேசினார்.
`ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்' - வேல்முருகன்
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ``அண்ணா பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில், மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஏன் இதுவரை வாய்திறக்கவே இல்லை. யார் அந்த சார் என்பதை ஆளுநர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும்." எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் மைக் ஆப் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரின் கருத்தை சுருக்கமாக முடித்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
ஆளுநர் மௌனமாக இருப்பது ஏன்? - கொங்கு ஈஸ்வரன்
அவருக்குப் பிறகு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் கொங்கு ஈஸ்வரன், ``யார் அந்த சார் என்பதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அந்த சார் ஆளுநராக இருந்தாலும், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்?" எனப் பேசினார்.
`வேறு எந்த நோக்கமும் இல்லை' - முதல்வர் ஸ்டாலின்
இந்த தீர்மானத்தின் மீதான நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், ``சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்து இந்த அவையிலே உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசியிருக்கிறீர்கள். இதை பயன்படுத்தி இந்த ஆட்சி மீது தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக ஒரு உறுப்பினர் பேசியிருக்கிறார். யாருக்கு என்ன நோக்கமிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்பக்கம் நின்று அவருக்கு நியாயத்தைப் பெற்றுத் தரும் நோக்கத்தை தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை குற்றவாளி உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தாலோ, அல்லது குற்றவாளியை காப்பாற்ற முயற்சி செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்திற்கானதே தவிர, உண்மையான அக்கறையோடு செய்யப்படுவதில்லை. 24.12.2024 அன்று பிற்பகல் சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இது காவல்துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை.
`FIR கசிய காரணம்..'
ஆனால் எதிர்க்கட்சிகள் முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக பேசுகிறார்கள். அதற்கு காரணம் ஒன்றிய அரசின் கீழ் செயல்படுகிற என்.ஐ.சி தேசிய தகவல் மையம். காவல்துறையால் உடனடியாக அந்தத் தொழில்நுட்பக் கோளாறு சுட்டிக்காட்டப்பட்டு, அதற்கு பின்னால் அந்த தொழில்நுட்பக் கோளாறும் சரி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அமைப்பும் விளக்கம் கொடுத்து கடிதமும் வெளியிட்டிருக்கிறது.
பாதுகாப்பு கேமரா இல்லை என பொத்தாம் பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் உண்மை இல்லை. சம்பவம் நடந்த வளாகத்தைச் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு தான் குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
`அது யாராக இருந்தாலும்சரி..'
முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக் கொண்டு 'யார் அந்த சார்' என கேட்கிறீர்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுதான் இந்த வழக்கை விசாரிக்கிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தால் அது யாராக இருந்தாலும்சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சனை இல்லாமல் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவிகிதம் உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
`யார் தடுத்தார்கள்..?'
இந்த வழக்கில், விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்யும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகளிடம் 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு சரியான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரணையில் இருக்கும் புலனாய்வு குழுவிடம் அதற்கான ஆதாரத்தை கொடுத்து விடுங்கள். அதை யார் தடுத்தார்கள்...
அது விடுத்து, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட மிக சென்சிட்டிவான ஒரு வழக்கில், வீண் விளம்பரத்திற்காகவும், குறுகிய அரசியல் லாபத்திற்காகவும் மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக இரும்பு கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற ஒரு சதியை உருவாக்குகிறார்கள். நிச்சயமாக இது மக்கள் மத்தியில் எடுபடாது.
எங்கள் அரசு அமைந்ததிலிருந்து, பெண்களுக்கான பாதுகாப்பில் தீவிரமாக இருக்கிறோம். குறிப்பாக பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 86 சதவிகிதத்திற்கும் மேல், 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகள் கல்லூரிகள் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2,39,000 மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். சத்யா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த குற்றவாளிக்கு, மிக குறுகிய காலத்தில் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் எங்கள் அரசுதான்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக, அரசு எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்ட மனம் இல்லை என்றாலும், வீண்பழியை சுமத்தாமல் இருந்தாலே போதும். நீதிமன்றமே எதிர்க்கட்சி வழக்கறிஞரை பார்த்து `பெண்களின் பாதுகாப்பு தொடர்பான உண்மையான அக்கறையோடு செயல்படுவதை விட்டுவிட்டு, இந்த வழக்கில் ஏன் அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறீர்கள்" என கேட்டதை இங்கு நினைவு படுத்துகிறேன். நீதிமன்ற அறிவுரையை பின்பற்றி வீண் அரசியலை தவிர்த்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
`பொள்ளாச்சியில் என்ன நடந்தது?'
தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. அதற்கு காரணம் இந்த அரசின் தொடர் நடவடிக்கைகள். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான பத்து மாநகரங்களில் சென்னையும், கோவையும் இருக்கிறது. பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லக்கூடிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. மனசாட்சி இல்லாமல் பெண்களின் பாதுகாவலர்கள் போல பேசுபவர்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். அப்போது அ.தி.மு.க ஆட்சியில் எந்த நடவடிக்கையும் இல்லை. வழக்கு சிபிஐ இடம் சென்றதற்கு பிறகுதான் அனைத்து விஷயங்களும் வெளிச்சத்திற்கு வந்தது.
`திராவிட மாடலாச்சி மகளிர் காண ஆட்சி'
இப்படி பெண்களுக்கு எதிராக ஆட்சி செய்தவர்கள் தான் 'யார் அந்த சார்' என பேஜ் அணிந்து அமர்ந்திருக்கிறார்கள் இதுபோல நூறு சாருடைய கேள்விகளை அ.தி.மு.க-வை பார்த்து என்னால் கேட்க முடியும். பொள்ளாச்சி வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய அதிமுகவிற்கு 12 நாள் ஆனது. இந்த வழக்கை பற்றி பொதுவெளியில் பா.ஜ.க-வினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க-வினரின் கதைகளை இந்த அவையில் பேசி இந்த அவையின் மாண்புகளை குறைக்க விரும்பவில்லை. திராவிட மாடலாச்சி மகளிர் காண ஆட்சி என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.