Travel Contest: பஸ் பிரேக் டவுன், கண்முன்னே வெள்ளிப் பனிமலை - சிலிர்க்க வைத்த `குலு மணாலி’
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் தவறாமல் என் மனதில் வந்து போகும் நினைவுகள் , 2019 ல் நான் சென்று ரசித்த ஹிமாச்சல் பிரதேசத்தின் குலு மணாலி தான்..
வெண்மையை சுமந்திருக்கும் குலு மணாலி
தென்னிந்தியாவின் கோடை வாசஸ்தலங்கள் எப்படி பசுமையை சுமந்திருக்குமோ.. அதுபோல் வட இந்தியா வெண்மையை சுமந்திருக்கும்.
சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானவழி, பிறகு அங்கிருந்து சாலைவழி எனச் சென்றோம். தலைநகர் டெல்லியில் முக்கிய அரசாங்க அலுவலகங்கள் இருக்கும் சாலைகள் அவ்வளவு அழகாக பரந்து விரிந்திருக்கும்.
மற்ற சாலைகள் போக்குவரத்து நெரிசலில் திண்டாடும்.

டெல்லியில் இருந்து சண்டிகர் செல்லும் நெடுஞ்சாலை அற்புதமாக இருக்கும்.
வழிநெடுக உயர்ரக மால்களைக் காணலாம். இரவு நேரங்களில் மின்னும் சண்டிகரை ரசித்துக் கொண்டே பயணிக்கலாம். இரவு உணவிற்கு எங்கு நிறுத்தினாலும், சுடச்சுட சப்பாத்தியும், சைட் டிஷ்ஷும் சுவையாகக் கிடைக்கும்.
சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ் ஏறினால் அந்தப் பயணம் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்.
நாங்கள் சென்ற பஸ் இரவு ஒரு மணிக்கு breakdown ஆனது. அதனால் கீழே இறங்கி வேடிக்கைப் பார்த்தோம்.
மலை மேலிருந்து பனி உருகி வழிந்தோடும் அழகான ஆறு பக்கவாட்டில் ஓடிக்கொண்டிருந்தது.
காற்றுக்கேற்ப மரங்கள் அசைந்தாட, அருவியின் சலசலப்பு சேர்ந்த ஒலி அவ்வளவு இனிமை.

பஸ் ரெடியானதும் அதில் ஏறி தூங்கியது தான் தெரியும். காலை கண் விழித்த போது கண் முன் வெள்ளிப் பனிமலை எங்கும் விரிந்து, உடம்பில் குளிர்ச்சி இறங்கி, வாவ் என்ற வார்த்தை கண்டிப்பாக வந்துவிடும், அனைவருக்கும்.
பாரதி பாடிய, `வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்’ என்ற வரிகள் மனதில் வந்து போகும்..
சிலநிமிடங்கள் பஸ் ஒரு இடத்தில் நிற்க, அந்தக் குளிர்ச்சிக்கு, எல்லோரும் தெருவில் அங்கங்கு இருக்கும் டீக்கடையில் டீ குடிக்காமல் இருக்க முடியாது.
நானோ, நடைபாதை கடையில் தேநீர் குடித்தேன் என நினைத்தபடி டீ அருந்தியபடியே , selfie எடுத்து எனக்குத் தெரிந்தவர்களுக்கு, first tea in Iceland என்ற caption போட்டு என் புகைப்படத்தைப் பகிர்ந்தேன்.
பிறகு பஸ் ஏறி எங்கள் resort சென்றடைந்து சிறிது ஓய்வெடுத்து பின் ஊர் சுற்றக் கிளம்பினோம்.
Sweater, shoes இல்லாமல் வெளியில் செல்ல முடியாது. அவ்வளவு குளிரிருக்கும். சுற்றி சுற்றி எங்கு பார்த்தாலும் பனிமலை தான். பார்ப்பதற்கு மிக அருகில் இருப்பது போல் தோன்றும். ஆனால் அதை அருகில் சென்று பார்ப்பதற்கு பல மணிநேரங்கள் பயணிக்க வேண்டும்.

மணாலி சாகசங்கள்
மணாலியில் சாகசங்களுக்குப் பஞ்சமில்லை. River crossing, river rafting, paragliding, போன்றவை இளைஞர்களை கவர்ந்திழுக்கும்.
Rothang pass என்ற இடத்திற்கு vehicle pass வாங்கிகொண்டு நீண்ட தூரம் dangri set என்ற ஒன்றை வாடகைக்கு வாங்கி, போட்டுக் கொண்டு சென்றால் பனிச்சிகரங்களை அடையலாம்..
அதிகாலையில் எழுந்து ரெடியாகி போனாலும், அங்கு செல்ல எப்போதும் ட்ராஃபிக் இருக்கும்.
நான்கு ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு பொறுமையாக அங்கு சென்றால் பயணக்களைப்பு மறந்து உற்சாகம் பீறிடும். அப்படியே சொர்க்கத்திற்கு சென்ற உணர்வு வரும்..
நம்மை சுற்றி பனிச்சிகரங்கள். கையில் பனிக்கட்டிகளை எடுத்து பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். அங்கும் நிறைய விளையாட்டுக்கள் இருக்கும். பனியில் சறுக்குவது, scooter ஓட்டுவது, அங்கு வளரும் அடர்த்தியான ரோமம் கொண்ட எருமைகள் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றவை.

அங்கு பசித்தால் கிடைப்பது நூடுல்ஸ் மட்டுமே.
அந்தக் குளிருக்கு அதை சாப்பிட்டால் ருசியாகவே இருக்கும். அந்தக் குளிர்ந்த காற்றுடன் கூடிய சூழ்நிலையில் அங்கேயே இருந்து விடக்கூடாதா வாழ்க்கையில் எனத் தோன்றும்.
மதியம் மூன்று மணிக்குமேல் அங்கு வானிலை மாறி அனைவரும் கட்டாயம் கீழிறங்க வேண்டும் என்ற நிலை வரும். மனசே இல்லாமல் அந்த இடத்தை விட்டு வர வேண்டியிருக்கும்.
வாழ்வில் இது போன்ற பனி சூழ்ந்த இடத்தில் கவலைகள் அனைத்தையும் மறந்து இயற்கையை ரசிக்க முடிந்த தருணங்கள் மீண்டும் கிடைக்குமா எனத் தெரியாது.
கீழே நகரத்தின் அருகிலேயே இருக்கும் சிறி சிறிய பனிமலைகளை பார்க்க அங்கிருக்கும் quad bike மூலம் செல்லாம்.
அதை ஓட்டுபவர்கள் 16 to 20 வயதுள்ள ஆண்பிள்ளைகள். அவர்களுக்கு பயம் கிடையாது .
நம்மை ஏற்றிக்கொண்டு வழுக்கும் பாறைகளில் முடிந்த அளவு வேகமாக ஓட்டுவார்கள்.
நமக்கு தான் மண்டை பத்திரம் மொமெண்ட் நினைவில் வரும். River rafting ம் அப்படிதான். படகை செலுத்துபவர் படகில் ஏறிய பின் நமக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என இன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸை குடுத்துவிடுவார்..
அதன்படி தான் படகு தண்ணீரில் மூழ்கும் போதும், பின் வெளியில் வரும் போதும் நாம் நடந்து கொள்ள வேண்டும்.. மிகுந்த தைரியத்துடன் நாம் படகில் ஏறி பயணித்தாலும், படகு மூழ்கி மீண்டும் மேலெழுந்து வருவதற்குள், எல்லா தெய்வங்களும் கண்முன் வந்து விடுவார்கள். மேலே வந்தவுடன் அனைவரும் பத்திரமாக படகில் இருக்கிறோமோ என்று உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

பனிச்சிகரங்களை ரசித்தபடியே , நம் எதிரில் எந்தச் சலனமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பியாஸ் (Beas) ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது. எங்கு சென்றாலும் நதியின் ஓசை மனதிற்கு இனிமையை தந்து கொண்டே இருக்கும்.
Solang valley என்ற இடத்திற்குச் செல்ல ரோப் காரில் செல்லவேண்டும். ரோப் கார் பயணத்தில் மேலே செல்ல செல்ல , கண்முன் விரியும் இயற்கைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.. மேலே ஏற ஏற குளிர் அதிகமாகிக் கொண்டே போகும்.
மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றால் தான் குளிரையும், பனியையும் பார்த்து உணர வேண்டும் என்ற அவசியமில்லை.
இதோ இங்கே நம் நாட்டிலியே அனைத்தையும் காணலாம் என்பது புரிய வரும். இங்கே , ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆடை ஆபரணங்களை வாடகைக்குத் தருகின்றனர். நாம் சிறிது நேரம் அதை அணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் கண்டிப்பாக மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது..
நகரத்தின் மையத்தில் நிறைய கடைகளும், சிற்றுண்டி விடுதிகளும் அமைந்த மார்க்கெட் ஏரியா இருக்கும். பானிப்பூரிக்கு பஞ்சமே இருக்காது.
நாங்கள் சென்ற தினம் அன்று மார்க்கெட் ஏரியாவில் சிறிய அளவில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதமான வானிலையில் இசையை ரசிக்க யாருக்குத்தான் பிடிக்காது!!
மணாலி வரை சென்று ஆப்பிள் தோட்டத்தைப் பார்க்காமல் இருக்க மனம் விரும்பவில்லை. எங்களை காரில் அழைத்துச் சென்ற ட்ரைவரிடம் கேட்டுக் கொண்டதில், அவர் ஆப்பிள் தோட்டம் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
சுற்றிலும் வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பச்சை நிற ஆப்பிள்கள் எங்கெங்கும், எட்டிப் பறிக்கும் தொலைவில் இருந்தாலும் அனுமதியில்லை. ஏக்கத்தோடு பார்க்கத்தான் முடிந்தது..

நகரத்தின் ஒரு ஓரத்தில் இருக்கும் புத்த கோயில் அமைதியுடன் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருக்கும். அமைதியான அந்த இடத்தில் குட்டி குட்டி புத்த பிக்குகளை காணலாம்.. அவ்வளவு அழகாக இருப்பார்கள் ஒவ்வொரு குட்டி பிக்குகளும்.
சில கோயில்களை ஆங்காங்கே பார்க்கலாம். நம்மூர் போல இல்லாமல் பளிங்கு தரையுடன் அந்த ஊரின் வானிலைக்கேற்ப கட்டப்பட்ட கோயில்கள் அவை.
மணிரத்னம் இயக்கத்தில் வந்த ரோஜா திரைப்படத்தில் வரும் இடிம்பா கோயிலும் இங்கே தான் இருக்கிறது. இடிம்பா தேவி, பாண்டவர்களில் ஒருவரான பீமனின் மனைவி ஆவார்.. ரோஜா திரைப்படத்தில் இந்த கோவில் இடம் பெற்றதால், நிறைய பேருக்கு இக்கோவிலைப் பற்றி தெரிய ஆரம்பித்தது. மணாலி வரும் பயணிகள் தவறாமல் இக்கோவிலுக்கும் வருகின்றனர்..

உணவு என எடுத்துக் கொண்டால், எல்லா ஹோட்டல்களிலும் சப்பாத்தி சப்ஜி டேஸ்டியாகவே எந்நேரமும் கிடைக்கும். தற்போதெல்லாம் எல்லா இடங்களிலும் தென்னிந்திய உணவுகளும் கேட்டால் கிடைக்கின்றன.
நான்கு ஐந்து நாட்கள் தேவைப்படும் அனைத்து இடங்களையும் சென்று பார்க்க.
பயணத்தை முடித்துவிட்டு பேருந்தில் மலையிலிருந்து கீழே இறங்கும் போது நதியும் நம்முடனே வழிநெடுக பயணித்துக் கொண்டிருக்கும்.
மாலை ஐந்து மணிக்கு பேருந்தில் ஏறினால் , மறுதினம் காலை ஏழு மணிக்குத் தான் டெல்லி வந்தடைய முடியும்.
நீண்ட நெடிய பயணம் போல் தோன்றும் .. ஆனால் கீழே இறங்கும் வரை நம்முடனே நதி வந்து கொண்டே இருக்கும்.
நதியிடம் எனக்கு எந்த கேள்விகளும் இல்லை.. நதியே நான் வந்து போனதை நினைவில் வைத்திருப்பாயா? என்பதைத் தவிர!
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.