அரபு மல்லிகை புரட்சியும், நேபாளம் Gen Z போராட்டமும் - வலதுசாரிகளிடம் வீழ்கிறார்க...
TVK: "தலைவரின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம்" - ஆனந்த் வைக்கும் வேண்டுகோள்கள் என்னென்ன?
விஜய் சுற்றுப்பயணம்
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணப் பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் மாதம் 20ஆம் தேதி (20.12.2025) சனிக்கிழமை வரை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் மேற்கொள்ள இருக்கிறார்.

23 நிபந்தனைகளுடன் அனுமதி
மொத்தம் 15 நாள்கள், ஒவ்வொரு வாரச் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர். சிலை அருகே வருகிற 13-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
திருச்சியில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் விஜய் அடுத்ததாக பெரம்பலூர் செல்ல திட்டமிட்டுள்ளார். பெரம்பலூரில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய அனுமதி இன்னும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், "நம் வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (13.09.2025) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து, தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார் என்பதை அனைவரும் அறிவீர்கள்.
தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்புமிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.
மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர்
நம் தலைவர் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் மனம் நெகிழ்ந்துள்ள அவர், இந்தச் சுற்றுப் பயணத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார். ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர்.
எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

வழிகாட்டு நெறிமுறைகள்
1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
2. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

3. நம் கழகத் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவர் அவர்களின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
4. காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
5. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
6. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
7. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
— TVK Party HQ (@TVKPartyHQ) September 12, 2025
8. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
9. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
10. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
11. காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.
12. தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.
நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்றி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs