TVK : பனையூர் அலுவலகத்தில் விஜய்; தவெகவில் இணையும் அரசியல் புள்ளி?! - பின்னணி என்ன?
தவெகவின் மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டாம் கட்டக் கூட்டம் பனையூர் அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடந்து வருகிறது. கூட்டத்தின் முடிவில் இரண்டாம் கட்ட மா.செக்கள் பட்டியலும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் தவெக கட்சியில் முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் இணையவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 24 ஆம் தேதி முதற்கட்டமாக 19 மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்திருந்தார். ஒரு மாவட்டத்துக்கு 15 பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான நியமன ஆணைகளையும் வழங்கியிருந்தார். இந்நிலையில், சென்னை, காஞ்சிபிரம், மயிலாடுதுறை, தருமபுரி, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற கிட்டத்தட்ட 19 மாவட்ட நிர்வாகிகளை இன்று பனையூர் அலுவலகத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, காலை 8:30 மணியிலிருந்தே நிர்வாகிகள் பனையூரில் கூட ஆரம்பித்தனர். நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக சரியாக மதியம் 1:50 மணிக்கு விஜய் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளாக நேரில் சந்தித்து அவர்களை வாழ்த்தி புதிய பொறுப்பில் எப்படி செயல்பட வேண்டும் என விஜய் அறிவுரையும் கூறவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஒரு மாவட்டத்துக்கு 10 செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கிறார்கள். அதேமாதிரியே ஒரு வார்டுக்கும் 15 செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்த 15 பேரும் 100 ரூபாய் டிடி எடுத்து மாவட்டத் தலைமைக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் பார்க்கையில் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் சில ஆயிரம் நிர்வாகிகள் பதவி உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அத்தனை நுணுக்கமாக நிர்வாகிகளை நியமிக்கவேண்டிய பொறுப்பு மொத்தமும் மாவட்டச் செயலாளர்களின் வசமே ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அறிவிக்கப்பட்ட மற்றும் வாய்மொழியாக உத்தரவாதம் கொடுக்கப்பட்ட மா.செக்கள் அத்தனை பேரும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். சில மாவட்டங்களில் 70-80% நிர்வாகிகளை நியமித்துவிட்டதாகவும் தகவல் சொல்கிறார்கள்.
விஜய் பனையூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென ஒரு முக்கிய அரசியல் புள்ளி பனையூர் அலுவலகத்துக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பானது.
அதுசம்பந்தமாக விசாரிக்கையில் ஒரு கட்சியின் பரபர முன்னாள் நிர்வாகி ஒருவர் சமீபத்தில் விஜய்யை சந்தித்துப் பேசியதாகவும் அதனைத் தொடர்ந்து அந்த முக்கியப் புள்ளி தவெகவுடன் இணைந்து பயணிப்பதற்கான வேலைகள் தடதடத்திருப்பதாகவும் தகவல் சொல்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள். இன்று மாலையோ அல்லது கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கமான பிப்ரவரி 2 ஆம் தேதியோ இந்த இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறது தவெக வட்டாரம்.