INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்குமார் சொல்வது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய தவெக-வின் தலைவர் விஜய், ``அடிமைக் கூட்டம் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அந்தக் கட்சியை இப்போது யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். பொருந்தாக் கூட்டணியால் அந்தக் கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் வேதனையில் இருக்கிறார்கள்" எனக் கடுமையாக அ.தி.மு.க-வை விமர்சித்துப் பேசினார்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``அனைவராலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகவோ, புரட்சித்தலைவி அம்மாவாகவோ ஆகிவிட முடியாது. உலகத்திற்கு ஒரு புரட்சித் தலைவர், ஒரு புரட்சித் தலைவி, ஒரு பேரறிஞர் தான். எங்கள் கட்சியின் அண்ணாவைப் பற்றிப் பேசாமல் தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்துவிட முடியாது.
அவர்கள் வேறு எந்தத் தலைவரையும் ஏற்கவில்லை. எங்கள் கட்சியின் தலைவர்களான அண்ணாவின் புகைப்படத்தையும், எம்.ஜி.ஆரின் புகைப்படத்தையும் உபயோகிக்கிறார்கள். எங்கள் கட்சித் தலைவர்களின் படங்களை உபயோகிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதிமுக எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம். எனவே, அதிமுக-வின் வாக்கு அவர்களுக்குச் செல்லாது.

காலம் காலமாக இரட்டை இலக்கு ஓட்டுப்போட்ட கைகள் அதை மாற்றிப் போடாது. யார் புரட்சித்தலைவர் படத்தைப் போட்டுக்கொண்டாலும், அல்லது நான்தான் புரட்சித் தலைவர் என்று சொன்னாலும் மக்கள் ஒருபோதும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய் பேசியது எல்லாமே வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு யுக்திதானே தவிர வேறு ஒன்றுமில்லை. அவருக்கு அதிமுகவின் வாக்குகள் போகாது" என்றார்.