ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
UP: ``ஒரு மோசமான குற்றவாளியை சட்டமன்றத்தில் புகழ்வதா..?'' - யோகியை சாடும் காங்கிரஸ் தலைவர்
படகோட்டி குறித்து யோகி ஆதித்யநாத்..
உத்தரப்பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில் படகோட்டி ஒருவர் ரூ. 30 கோடி சம்பாதித்ததாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான சட்டமன்றத்தில் பேசிய அவர், ``130 படகுகளை வைத்திருந்த படகோட்டி 45 நாள்களில் ரூ.30 கோடி சம்பாதித்த வெற்றிக் கதையை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது ஒரு படகு 45 நாள்களில் ரூ.23 லட்சம் சம்பாதித்துள்ளது. இந்தப் படகுகளின் ஒரு நாள் வருமானம் ரூ50,000 - 52,000 வரை இருக்கும். அந்தப் படகோட்டி, படகுகளை வாங்குவதற்காக வீட்டில் இருந்த பெண்களின் நகைகளை விற்றதாகக் கூறியிருந்தார். அவரின் அந்த துணிச்சலான முடிவால் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க முடிந்தது" என்று கூறினார்.

படகோட்டி மஹ்ரா பேட்டி..
அதைத் தொடர்ந்து அந்தப் படகோட்டி மஹ்ரா சமூக ஊடகங்களில் பேசுபொருளானர். அவர் அளித்திருந்த ஒரு நேர்காணலில், ``நான் பல ஆண்டுகளாக பிரயாக்ராஜில் படகு ஓட்டி வருகிறேன். 2019 முதல் நான் 60 - 70 படகுகளை இயக்கி வந்தேன். 2019-ம் ஆண்டு கும்பமேளாவில் பக்தர்களின் வருகையைப் பார்த்தபோது, 2025-ம் ஆண்டு மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் வருகையை என்னால் கணிக்க முடிந்தது. அப்போதுதான் மகா கும்பமேளாவிற்கு முன்பு புதிய படகுகளை வாங்குவதில் எனது சேமிப்பு அனைத்தையும் முதலீடு செய்ய முடிவு செய்தேன்," என்றார்.
மஹ்ராவின் குற்றப் பின்னணி...
அதே நேரம் மஹ்ராவின் குற்றப் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு குற்றவாளியை முதல்வரே புகழ்வது அவரை ஊக்குவிப்பது போலாகும் என எதிர்க்கட்சிகள் யோகியை கடுமையாக சாடிவருகின்றனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, பிரயாக்ராஜில் தற்போது பேசுபொருளாகிவிட்ட மஹ்ரா மீது கொலை, கொலை முயற்சி, கலவரம், துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரின் தந்தை, சகோதரர் மீதும் குற்ற வழக்குகள் இருந்தன.

காங்கிரஸ் தலைவர் கண்டனம்...
மகா கும்பமேளா பாதுகாப்பு பணிக் காவல்துறையினர், பிப்ரவரி 11, 2025 அன்று பணம் பறித்தல், பிற படகு ஓட்டுநர்களைத் துன்புறுத்துதல், அடாவடி செய்து அத்துமீறுதல் ஆகியவற்றிற்காக அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருப்பதாக கூறினர்.
இது குறித்து மஹ்ரா எந்த கருத்து தெரிவிக்க மறுத்திருக்கும் நிலையில், உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், ``ஒரு மோசமான குற்றவாளியை புகழ்வதற்கு சட்டமன்றத்தில் எவ்வாறு திட்டமிடப்பட்டது..?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.