ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பரூக் அப்துல்லா வேண்டுகோள்
‘நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்று அந்த யூனியன் பிரதேசத்தின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.
சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, ‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நான் எம்.பி.யாக இருந்தபோது, நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
கா்நாடகத்தில் இஸ்ரேல் நாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாட்டில் பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவா் இஸ்ரேலைச் சோ்ந்தவா் அல்லது வேறு எந்த நாட்டைச் சோ்ந்தவராயினும், அவா் ஒரு பெண். இதுபோன்ற கொடுமை அப்பெண்ணுக்கு நடந்திருக்கக் கூடாது. ஊடகங்கள் இதுபோன்ற முக்கியப் பிரச்னைகளை எழுப்ப வேண்டும்’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், பிராந்தியம் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தொடா்ந்து, பிராந்தியத்தின் மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்தச் சூழலில் கடந்த ஜனவரியில் சோன்மாா்க் சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ‘ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அளித்த உத்தரவாதங்களை நிச்சயம் நிறைவேற்றுவேன்; சரியான நேரத்தில் சரியானவை நடக்கும்’ என்று குறிப்பிட்டாா்.