Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
ஹெச்1பி அமெரிக்க விசா மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பாக அண்மையில் வெடித்த விவாதம், டொனால்டு ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களுக்குள்ளேயே குடியேற்றக் கொள்கை விவகாரத்தில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் பெரும் தொழிலதிபரும், ட்ரம்ப்பின் (தற்போதைய) வலது கரமும் ஆன எலான் மஸ்க் இந்த விசாக்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தனது வலுவான ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளார். இன்னொரு பக்கம் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன், ஹெச்1பி விசா திட்டம் என்பது ‘முழுக்க முழுக்க மோசடியான ஒன்று’ என்று சாடியுள்ளார்.
இந்த சர்ச்சை, புலம்பெயர்ந்தோரை அமெரிக்க கலாசாரத்துக்கு அச்சுறுத்தலாகக் கருதும் வலதுசாரிகளுக்கும், உலகளாவிய அளவில் திறமையாளர்களை அணுகுவதை விரிவுபடுத்த விரும்பும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கும் இடையிலான வெறும் சித்தாந்த மோதல் அல்ல. மாறாக, இது ட்ரம்ப் ஆதரவாளர்களின் எதிர்கால திசையில் அதிகாரத்தை நோக்கிய போராட்டமாகும்.
தொழில்நுட்ப வலதுசாரிகள் மற்றும் தேசியவாத வலதுசாரிகளின் இந்தக் கூட்டணி சோதிக்கப்பட வேண்டியிருந்தது என்று அரசியல் நோக்கர்கள் முன்பே கூறியிருந்தனர். ஆனால், ஜனவரி 20 அன்று ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே இந்த சோதனை வந்துவிட்டது போல் தெரிகிறது.
2024 தேர்தலுக்குப் பிறகு முற்போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையிலான பிளவுகளை ஜனநாயகக் கட்சியினர் கையாள்வது போலவே, ட்ரம்ப் ஆதரவாளர்களும் தங்களின் முக்கிய விவகாரமான குடியேற்றம் தொடர்பான உட்கட்சி பூசலை தீர்க்க முயற்சிக்கின்றனர்.
எலான் மஸ்க் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலிக்கான் பள்ளத்தாக்கு, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு அதிக தொழில்நுட்ப திறமையாளர்களை கொண்டுவருவதற்காக தொழிலாளர் விசாக்களின் எண்ணிக்கையை அது அதிகரிக்க விரும்புகிறது.
இந்தக் கொள்கை புதியதல்ல. 2012-ஆம் ஆண்டில், குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி, அமெரிக்காவில் முதுநிலைப் பட்டம் பெறும் நபருக்கு கிரீன் கார்டை வழங்குவதாக முன்பே உறுதியளித்தார்.
தனது முந்தைய நிர்வாகத்தில், ட்ரம்ப்பே கூட ஹெச்1பி விசாக்களை கட்டுப்படுத்த அழுத்தம் கொடுத்தார். ஆனால், இப்போது அவர் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கிட்டதாக தெரிகிறது. ட்ரம்பின் சமீபத்திய அறிக்கைகள் மஸ்க்கின் கருத்துகளைப் போலவே இருப்பது, ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கை மறுவரையறை செய்யப்படுகிறதா என்ற கவலையை ட்ரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மஸ்க் தனது நிறுவன நன்மைக்காக ட்ரம்ப்பிடம் செல்வாக்கு செலுத்துகிறார் என்று அவர்கள் நம்புகின்றனர்.
தீவிர வலதுசாரிகளை பொறுத்தவரை அவர்களது கவலை மஸ்க்குடன் நின்றுவிடவில்லை. காரணம், சமீபத்தில் மெட்டா சிஇஓ மார்ஜ் ஸக்கர்பர்க் மற்றும் ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் இருவரும் தேர்தலுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேசியுள்ளனர். ட்ரம்ப் தனது அமைச்சரவையையும், முதல் 100 நாட்களுக்கான முன்னுரிமைகளையும் கட்டமைக்கும் வேளையில், அவர்கள் தங்களது இருப்பை தக்கவைக்க முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.
அதிலும் மெட்டா நிறுவனம், வெள்ளை மாளிகையுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தனது பணியாளர்களை கூட மாற்றி வருகிறது. சமீபத்தில், அந்த நிறுவனம், அதன் உலகளாவிய கொள்கைத் தலைவரும், இங்கிலாந்தின் முன்னாள் துணைப் பிரதமரும், இடதுசாரி சார்புடைய லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் முன்னாள் தலைவருமான நிக் கிளெக்கையும், ஜார்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்த ஜோயல் கப்லானையும் மாற்றுவதாக அறிவித்தது.
சிலிக்கான் பள்ளத்தாக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களும் எப்போதும் இயற்கையான கூட்டாளிகளாக இருந்ததில்லை. எந்தவொரு குறுகிய கால கூட்டணியும் எப்போது வேண்டுமானாலும் உடைவதற்கான அறிகுறிகளை கொண்டிருக்கும். இருப்பினும், தற்போது ட்ரம்ப்பிடம் செல்வாக்கு பெற்றுள்ள மஸ்க் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள், அவரது அதிபர் பதவி தொடங்கியவுடன் அந்த செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
பல நிபுணர்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளபடி, ட்ரம்ப் சித்தாந்த ரீதியாக இருப்பதை விட பரிவர்த்தனை ரீதியாக செயல்படுபவர். உறுதியாக நிறுவப்பட்ட தனது கொள்கைகளை விட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையியே அவர் தற்போது முடிவுகளை எடுக்க முனைகிறார். ட்ரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான இந்த ‘நட்புறவில்’ கொள்கை வேறுபாடுகளால் விரிசல் ஏற்படலாம்.
தேசியவாதிகளுக்கும் பெரிய தொழில்நுட்ப ஆளுமைகளுக்கும் இடையே சமரசத்தை டிரம்ப் ஏற்படுத்த முயலலாம். அமெரிக்க - மெக்சிகோ எல்லைச் சுவரை மீண்டும் புதுப்பிப்பது, குடியேற்ற அமலாக்கத்தை தீவிரமாக விரும்பும் தேசியவாதிகளை திருப்திப்படுத்தக்கூடும்.
அதே நேரத்தில், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எம்ஐடி போன்றவற்றிலிருந்து பட்டம் பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான குடியேற்ற பாதைகளை விரிவுபடுத்துவது மஸ்க் போன்ற தொழில்நுட்பத் தலைவர்களை ஈர்க்க உதவும்.
ஹெ1பி விசாக்கள் குறித்த தற்போதைய சூடான விவாதம், இப்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றினாலும், அமெரிக்க பொருளாதாரவாதத்தில் மேலும் பின்வாங்குமா என்பது பற்றிய பரந்த கணக்கீட்டோடு ஒப்பிடுகையில் இறுதியில் மங்கிவிடும் என்றே உலக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.