அவசரநிலை: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000; ஒடிசா அரசு
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் பிறந்தநாள்... பொங்கலிட்டு வழிபட்ட மக்கள்..!
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டியில், 58 ஆம் கால்வாய் விவசாய சங்கத்தினர் அவருக்கு பொங்கல் வைத்து விழா கொண்டாடினர்.
தென்மாவட்டத்தில் வறட்சியையும் மக்களின் துயரத்தையும் தீர்க்கும் வகையில் பெரு முயற்சி எடுத்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்தவர், பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னிகுக் ஆவார். அவருடைய பிறந்த நாள் ஜனவரி 15 ஆம் தேதி ஆகும்.
அந்த நாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் முல்லைப் பெரியாறு அணையால் பயன்பெறும் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் தங்கள் நன்றியை செலுத்தும் வகையில் அறுவடைத் திருநாளான பொங்கலன்று, அவருக்கு பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாய் சங்க விவசாயிகள் ஜான் பென்னிக்குக்கின் பிறந்த நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடினர்.
இந்த விழாவில் திமுக, அதிமுக, பார்வட் ப்ளாக் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், விவசாய அமைப்பினர், பொதுமக்களும் கலந்து கொண்டனர். உசிலம்பட்டியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் ஜான் பென்னிகுக் உருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதைத்தொடர்ந்து வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் பென்னி குக் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பொங்கல் வழங்கப்பட்டது.