செய்திகள் :

Vaishali: FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் ஆனார் வைஷாலி; மேலும் ஒரு உலக சாதனை!

post image

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய வைஷாலி, இன்று தனது கடைசி சுற்றில் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜோங்கியுடன் இன்று மோதினார்.

தனது இறுதிச்சுற்றை டிராவில் முடித்த வைஷாலி, மொத்தமாக 11 சுற்றுகளில் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

டான் ஜோங்கி - வைஷாலி
டான் ஜோங்கி - வைஷாலி

இந்த வெற்றியின் மூலம், FIDE மகளிர் கிராண்ட் சுவிஸ் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் வைஷாலி.

மேலும், இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு மூன்றாவது இந்தியராக வைஷாலி நேரடி தகுதிபெற்றிருக்கிறார்.

கடந்த ஜூலையில் நடைபெற்ற மகளிர் செஸ் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக், இரண்டாம் இடம் பிடித்த கோனேரு ஹம்பி ஆகிய இந்திய வீராங்கனைகள் அடுத்தாண்டு கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டனர்.

வெற்றி குறித்து பேசிய வைஷாலி, "சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் எனக்கு கடினமானதாக அமைந்தது. அதற்குப் பிறகு கிராண்ட் சுவிஸ் தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

தொடர்ச்சியாக ஏழு ஆட்டங்களில் தோற்றது எனக்கு மிகக் கடினமாக இருந்தது. கடந்த சில வாரங்களில், நான் நிறைய விஷயங்களை மாற்ற முயற்சித்தேன்.

ஒரு வகையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடர் அனுபவம்தான் நான் இத்தொடரை வென்றதற்குக் காரணம்" என்று கூறினார்.