`எம்.ஜி.ஆர் சொன்னால் அது வேத வாக்கு, விஜய் சொன்னால் அது..!' - பொன்னார் கூறுவது என்ன?
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முன்பு 14 வகையான வரிகள் இருந்தன. அவற்றை எளிமைப்படுத்தி ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. இப்போது ஜிஎஸ்டி-யில் வரிகள் 5 சதவீதம், 15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களும், பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்களும், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுவார்கள். பொது மக்களுக்கும் அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். முன்பு பாண்டிச்சேரியில் ஒரு விதமான வரி, தமிழ்நாட்டில் ஒரு விதமான வரி என மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடுகள் இருந்தன. இதனால் பொருள் வாங்குவதற்காக பலரும் மாநிலம் விட்டு மற்றொரு மாநிலம் செல்லும் நிலை இருந்து வந்தது. இன்று நாடு முழுவதும் ஒரே நிலை கொண்டுவரப்பட்டிருக்கிறது. உலகின் முதல் நிலைக்கு நாம் வரவேண்டுமானால் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டி இருந்தது. அதன்படி தான் ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது. ராணுவ தளவாடங்களும் மருந்து பொருட்களும் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். எனவே ஜி.எஸ்.டி வரி குறைப்புக்கும் அமெரிக்காவின் அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை. இன்றைய காலகட்டத்திற்கும் எதிர்காலத் தேவைக்கும் முன்னோடியாக ஜி.எஸ்.டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

கூட்டணியை கையாளுவதில் அண்ணாமலை நன்றாக செயல்பட்டதாகவும், நயினார் நாகேந்திரனை குற்றம்சாட்டியும் டி.டி.வி தினகரன் பேசியதாக நீங்கள் சொல்கிறீர்கள். டி.டிவி தினகரன் பேசிய கருத்துக்களை முழுமையாக பார்க்க வேண்டும். நயினார் நாகேந்திரனும் நானும் நெருக்கமானவர்கள்... எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது என அதே பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். மேலும் டிசம்பர் மாதத்துக்குப் பிறகுதான் கூட்டணி பற்றி முடிவு எடுப்போம் எனவும் அந்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார். எனவே முழுமையான பேட்டியைத்தான் நாம் பார்க்க வேண்டும். இடையில் இருந்து ஒரு வார்த்தை எடுத்து அதற்கு அர்த்தம் கற்பிக்கக் கூடாது. அனைத்து கட்சிகளும் டிசம்பர் மாதத்தில்தான் கூட்டணி குறித்து முடிவுகளை எடுக்கும். தி.மு.க கூட்டணியிலும் திருமாவளவன் ஒரு கருத்து கூறுகிறார், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கருத்து கூறுகிறது. எனவே எல்லா கூட்டணிகளும் இறுதி செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் பார்க்கக் கூடாது.
அண்ணா தலைநிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளது பற்றி கேட்கிறீர்கள். அண்ணா எத்தனை ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அவர் காலமாகும் போது தன்னுடைய கட்சியை யாரிடமாவது ஒப்படைத்து விட்டு போனாரா? எனக்குப் பின் நீங்கள்தான் மகுடம் சூட்டி ஆண்டுகொண்டிருக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டுபோனாரா. என்னுடைய கருத்தை எடுத்துச் செல்வதற்கு நீங்கள் தான் உகந்த நபர் என யாரிடமாவது சொல்லிவிட்டுப் போனாரா? தமிழ்நாட்டில் பெருமை சேர்க்கக் கூடிய பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த தலைவர்கள் அந்தந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். ஒருவர் காலமான பிறகு அவர் சொல்லாத விஷயங்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அதை நான் தான் செய்யப் போகிறேன் என்று சொன்னால் அது சரியில்லாத முறை. அண்ணா பேசிய விஷயத்தைச் சொல்லுங்கள். அண்ணா கொள்கையை நாங்களும் கடைபிடிக்கிறோம் எனச்சொல்லுங்கள். அண்ணா கொள்கையை நாங்கள்தான் காத்து பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்றால், எம்.ஜி.ஆர் அந்தக் கொள்கையை தூக்கிப்போட்டுவிட்டு போனாரா? எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரை அசைக்க முடியவில்லை.

விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் போகும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம் கூடுகிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு காத்து நின்று பார்க்கும் இவ்வளவு பெரிய கூட்டம் விஜய்க்கு இருக்கிறது. அதற்காக எம்.ஜி.ஆருக்கு இருக்கும் அதே பாலோயர்ஸ் விஜய்க்கும் இருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. எம்.ஜி.ஆர் எதைச் சொன்னாலும் அது வேத வாக்கு. விஜய் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் தான் போட்டி என்று விஜய் சொல்கிறார் என்றால் அந்த ஒற்றை வார்த்தையில் தமிழக வெற்றிக் கழகம் தோல்வியை நோக்கி போய்விடும்" என்றார்.