டெல்லியில் 'யெஸ்' ஆர் 'நோ' பரீட்சை... என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்... புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம்' என்ற முழுக்கத்தோடு தொகுதிவாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கோவையில் கடந்த மாதம் தொடங்கிய இந்த பயணத்தில் கிட்டத்தட்ட 125 தொகுதிகளுக்கு மேல் பயணப்பட்டுவிட்டார் எடப்பாடி. இதற்கிடையே, ' அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கவேண்டும்' என்று கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் செங்கோட்டையன்.

செப்.5-ம் தேதி இதுகுறித்து பிரஸ்மீட் வைத்து அறிவித்த செங்கோட்டையனுக்கு 10 நாள்கள் கெடுவைப்பதாக சொல்லியிருந்தார். அந்த கெடு, செப் 15-ம் தேதியோடு முடியும் நிலையில் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சி.ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு நேரில் வாழ்த்து சொல்வதற்காக டெல்லி செல்லவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு முழுக்க நாள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் எடப்பாடி, அதை இரண்டு நாள்களுக்கு ஒத்திவைத்துவிட்டு டெல்லி செல்கிறாரென்றால், விவகாரம் பெரிதாகதான் இருக்கிறது என்கிறது அ.தி.மு.க கூடாராம்... அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது விரிவாக விசாரித்தோம்.
திட்டமிடலும் அழைப்பும்...
டெல்லி பறக்க தயாரான எடப்பாடி!
இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம்.
"எடப்பாடியின் எழுச்சிப் பயணம் மிகத் தீவிரமாக ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இணைப்புக்கு மீண்டும் வாய்ஸ் கொடுத்த செங்கோட்டையனால், கட்சிக்குள் மீண்டும் கலகக்குரல் கேட்ட தொடங்கியிருக்கிறது. இதை எடப்பாடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்ஸும் டிடிவி தினகரனும் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில், அதை சரிசெய்யவேண்டிய கட்டாயத்துக்கு பா.ஜ.க தலைமை வந்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் என்.டி.ஏ கூட்டணிக்கு எடப்பாடி தலைமை என்பதால், அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் பா.ஜ.க-வால் எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை தன்னிச்சையாக பா.ஜ.க முடிவெடுத்தால், அதற்கு நேர்மாறான ஒருமுடிவை எடப்பாடி எடுக்கக்கூடும். எனவே, அதுகுறித்து எடப்பாடியிடம் பேச டெல்லி தலைமை பலமுறை முயற்சி செய்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையை எடப்பாடி தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார்.
இந்தநிலையில்தான், எடப்பாடிக்கு நெருக்கமான புதிதாக துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும், சி.பி.ராதாகிருஷ்ணனிடமிருந்து டெல்லிக்கு வருமாறு அழைப்பு வந்தது. கூட்டணி தொடர்பாக பேசவேண்டும் என்று அழைப்பு வந்திருந்தால், அதை எடப்பாடி தள்ளிப்போட முடிந்திருக்கும். ஆனால், சி.பி.ஆரிடமிருந்து அழைப்பு வந்ததால், அதை எடப்பாடியால் தவிர்க்க முடியவில்லை. இந்தநிலையில்தான், கொங்கு பகுதியில் எழுச்சிப்பயணம் முடிந்து தர்மபுரியில் பயணத்தை தொடங்க ஏற்பாடானது. அப்போது, தர்மபுரி பயணத்தை இரண்டு நாள் ஒத்திவைக்கவேண்டும் என்று முடிவானதும், எடப்பாடி டெல்லி செல்வது உறுதியானது. வடபழனி கூட்டத்தில், டெல்லி செல்லவில்லை என்று எடப்பாடி மறுக்கவில்லை.

அந்தவகையில், இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் எடப்பாடி, முதலில் சி.பி.ஆரை சந்தித்து வாழ்த்து சொல்கிறார். சின்னதாக ஒரு டீ பார்ட்டியில் கலந்துக் கொள்ளும் எடப்பாடி, அடுத்ததாக அமித் ஷாவை சந்திக்கவும் ஏற்பாடாகிறது. எழுச்சி பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில், அதை ஒத்திவைத்துவிட்டு எடப்பாடி டெல்லி பறக்கிறாரென்றால், விஷயமில்லாமல் இருக்காது. இதேபோலதான், கடந்த பிப்ரவரியில் சட்டமன்றம் நடக்கும்போது டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அதன்பின்னர்தான், கூட்டணி மீண்டும் உருவானது.
இந்த சந்திப்பில் இரண்டு விஷயங்களை பேச வாய்ப்பு இருக்கிறது. ஒன்று என்.டி.ஏ கூட்டணியின் வெற்றி வாய்ப்பு தி.மு.க கூட்டணியின் நிலைமை ஆகியவை குறித்து பேசப்படும். இதற்காக இருதரப்பிலும் சில டேட்டாகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்தப்படியாக இணைப்புக்கான சாத்தியக்கூறுகளை எடுக்க விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. அதேநேரத்தில், அமித் ஷாவின் ப்ரோகிராம் மாற்றப்பட்டால், சந்திப்பு நிகழாமலிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால், சி.பி.ஆரை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடுவார் எடப்பாடி." என்றனர் விரிவாக.
தொடர்ந்து டெல்லி விவகாரப் புள்ளிகளிடம் பேசும்போது, " அமித் ஷா எடப்பாடி சந்திப்பு என்பது முன்பே நடந்திருக்கவேண்டியது. ஓ.பி.எஸ் தினகரன் வெளியேற்றம், என்.டி.ஏ கூட்டணியின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தினகரனை சேர்த்துகொள்ளவே முடியாது என்று எடப்பாடி உறுதியாக இருந்தார். இதனால், தினகரனை கூட்டணிக்குள் சேர்க்கமுடியாது. தனித்து நின்ற தினகரனால்தான், என்.டி.ஏ கூட்டணி 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றியை பறிகொடுத்தது. அதுபோன்ற ஒரு ரிஸ்கை மீண்டும் எடுக்கும் மனநிலையில் டெல்லி பா.ஜ.க இல்லை.

இந்தமுறையும் எடப்பாடி அதே மனநிலையில் இருப்பதால்தான், என்.டி.ஏ கூட்டணி மிகவும் வீக் ஆகிக் கொண்டே போகிறது. இந்தசூழலில் செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., தினகரனை கைக்கூலிகள் என்று விமர்சனம் செய்து, அவர்களை இணைக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். எனவேதான், இதுகுறித்து ஒருமுடிவை எடுத்தே ஆகவேண்டும் என்று எடப்பாடி டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அதன்படி, இணைப்போ அல்லது என்.டி.ஏ கூட்டணியில் ஓ.பி.எஸ் தினகரன் இருப்பது பிரச்னை இல்லையென டெல்லியிடம் எடப்பாடி உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஒன்று ஓ.பி.எஸ் தினகரனுக்கு எடப்பாடி 'எஸ்' சொல்லவேண்டும். இல்லையென்றால், 'நோ' என்பதை இறுதி செய்யவேண்டும். இதில் 'எஸ்' என்று எடப்பாடி சொன்னால், அதற்கான வேலைகள் அடுத்தடுத்த நடக்கும். ஒருவேளை 'நோ' சொன்னால், அவரை 'எஸ்' சொல்லவைப்பதற்கும்... அல்லது அவருக்கு எதிரான முடிவை எடுக்கவைக்கவும் டெல்லி தயாராகும். அந்தவகையில், எடப்பாடிக்கு இந்த டெல்லி பயணம், 'யெஸ்' ஆர் 'நோ' பரீட்சை எழுதுவதற்கானதுதான்." என்றனர் சூசகமாக.
இத்தகைய சூழலில், சென்னை வடபழனியில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், செங்கோட்டையன், ஓ.பி.எஸ்., தினகரனை கைக்கூலிகள் என்று மறைமுகமாக விமர்சனம் செய்து, அவர்களை இணைக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. எனவே, அவரின் இந்த டெல்லி விசிட் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?