VCK: `2026-ல் திமுக கூட்டணியில் குறைந்தது 25 இடங்கள்’ - வன்னி அரசு பேச்சும்; திருமா ரியாக்ஷனும்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன. அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடத்தி முடித்த ஒருவாரத்தில் தி.மு.க தற்போது செயற்குழு கூட்டம் நடத்தி முடித்திருக்கிறது. ஒருபக்கம், மக்கள் விரும்பும் கூட்டணி அமைக்கப்படும், தி.மு.க வீழ்த்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். மறுபக்கம், நாடாளுமன்றத் தேர்தலில் 400 சீட் வெல்வோம் என்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கூறி வந்தது போல தற்போது முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் 2026-ல் 200 சீட் வெல்வோம் என செல்லுமிடங்களிலெல்லாம் இப்போதே பரப்புரை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இதற்கிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, `ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற விசிக முழக்கம் அரசியல் களத்தில் சற்று பரபரப்பான பேசுபொருளானது. இந்த நிலையில், விசிக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு, 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் 25 சீட்கள் பெற விருப்பம் எனத் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த வன்னி அரசு, ``விசிக-வுக்கான வலிமை என்பது, குறைந்தபட்சம் இரட்டை இலக்கத்தில் சட்டப் பேரவையில் இருக்க வேண்டும். அதற்குக் குறைந்தபட்சம் 25 இடங்களாவது கேட்டுப் பெற வேண்டும் என்பது அடிநிலைத் தொண்டர்களின் மனநிலை. சனாதனத்துக்கு எதிராக இந்தியாவில் அம்பேத்கரின் கொள்கைகளை, பெரியாரின் கொள்கைகளைப் பாதுகாத்து வலிமையாக இயங்கிக் கொண்டிருக்கின்ற பேரியக்கத்துக்கு 25 இடங்கள் கொடுக்க வேண்டும் என்னைப் போன்ற அடிநிலைத் தொண்டர்களின் விருப்பம். இறுதியில் எவ்வளவு என்று தலைவர் முடிவெடுப்பார். இருப்பினும் எங்களின் விருப்பத்தைக் கட்டாயம் நாங்கள் சொல்வோம்." என்று கூறினார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் வன்னி அரசு பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், ``தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார். எவ்வளவு இடங்கள் வேண்டுமென்பதைக் கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்துகிறபோதுதான் முடிவுசெய்வோம். முன்கூட்டியே இவ்வளவு இடங்கள்தான் வேண்டும் என்பதை நாங்கள் நிபந்தனையாக வைக்க வாய்ப்பில்லை. அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை. கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றபோது அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை நாங்கள் மேற்கொள்வோம்." என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வி.சி.க, தி.மு.க கூட்டணியில் இரண்டு இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.