Veena Reddy: USAID நிதியை நிறுத்திய ட்ரம்ப்... பாஜக எம்.பி குறிப்பிட்ட வீணா ரெட்டி; யார் இவர்?
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா USAID மூலம் நிதியுதவி செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. 1950 களில் இந்தியாவின் வாக்களிப்போர் சதவிகிதம் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதனால், இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, 1961-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜான் கென்னடியால் இந்த திட்டம் மூலம் இந்தியாவுக்கு நிதி வழங்குவது தொடங்கப்பட்டது. தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த இந்த நிதி, இந்த ஆண்டு 2.1 கோடி டாலர் நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக இரண்டாம் முறை அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

மேலும், 'இந்த நிதி தேர்தல் முடிவுகளில் அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை அகற்ற பயன்படுத்தியிருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முவைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி தன் எக்ஸ் பக்கத்தில், ``2021 - 2024 காலகட்டத்தில் USAID தலைவராக இருந்தவர் வீணா ரெட்டி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியா வந்த அவர், தேர்தல் முடிவுந்தவுடனே மீண்டும் அமெரிக்கா சென்றுவிட்டார். அப்போது அவர் அமெரிக்கத் தூதருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். அவர் இந்தியாவில் இருந்தபோது, USAID தொகை யாருக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை விசாரித்திருக்கலாம்" என்றார். அதைத்தொடர்ந்து, இந்திய வம்சாவளிப் பெண் வீணா ரெட்டி சமூக ஊடகங்களில் தேடப்படும் ஒருவராகிவிட்டார்.
ஆந்திரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட வீணா ரெட்டி, கொலம்பியா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் ஜூரிஸ் டாக்டர் பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். நியூயார்க், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸில் கார்ப்பரேட் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கே வசித்து வருகிறார். கம்போடியாவில் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் ஜனநாயகம் ஆகிய துறைகளில் திட்டங்களை மேற்பார்வையிடும் மிஷன் இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.

ஹைட்டியில் துணை மிஷன் இயக்குநராக இருந்த இவர், நிலநடுக்கத்திற்கு பிந்தைய மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். அமெரிக்க வெளியுறவு சேவையின் மூத்த தொழில் உறுப்பினராகப் பணியாற்றிய இவர், ஆகஸ்ட் 5, 2021 அன்று USAID-ன் இந்திய அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார். இந்தியாவுக்கு மட்டுமல்லாது, பூட்டானின் USAID தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். அமெரிக்க தூதரகத்தின்படி, இந்தியா மற்றும் பூட்டானில் USAID-ஐ வழிநடத்திய முதல் இந்திய அமெரிக்கர் இவர்தான். ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் USAID-ன் திட்டங்களுக்கான சட்ட நடைமுறைகள் உள்ளடக்கிய அதன் உதவி பொது ஆலோசகராக இருந்திருக்கிறார்.
இந்தியாவின் USAID தலைவராகப் பொறுப்பேற்ற வீணா ரெட்டியின் தனது பணி காலத்தில், USAID-ன் தொகை கணிசமாக உயர்ந்துக்கொண்டே வந்தது. அதாவது, 2020-ம் ஆண்டில், USAID 83.2 மில்லியன் டாலராக இருந்தது. 2021-ல் 94.3 மில்லியன் டாலராக உயர்ந்தது. 2022-ல் அது பலமடங்கு அதிகரித்து, 228 மில்லியன் டாலர் (ரூ.1982 கோடி) என உயர்ந்தது. 2023-ல் 175.7 மில்லியன் டாலராகவும், 2024-ல் 151.8 மில்லியன் டாலராகவும் சற்றுக் குறைந்ததாக அமெரிக்க அரசின் தரவுகள் மூலம் அறியமுடிகிறது.

2022-ம் ஆண்டிற்கான 228 மில்லியன் டாலர் நிதியில், இந்திய USAID நிர்வாகம், அடிப்படை சுகாதாரத்திற்காக கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை அதாவது 140.7 மில்லியன் டாலரை செலவழித்தது. தாய், சேய் சுகாதாரத்திற்காக 25.09 மில்லியன் டாலர், HIV/AIDS தடுப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களுக்கு 10.57 மில்லியன் டாலர், பொது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 7.186 மில்லியன் டாலர், எரிசக்திக்காக 5.6 மில்லியன் டாலர் ஒதுக்கி, அதற்குரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, USAID திட்ட இயக்குநராக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவரின் பதவிக்காலத்தில், சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்வி, சமூக சேவைகள், ஜனநாயகம், மனித உரிமைகள், நிர்வாகம் போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களை அவர் மேற்பார்வையிட்டார். இந்திய ரயில்வே, மின்சார அமைச்சகம், நிதி ஆயோக், தேசிய மின்சார பயிற்சி நிறுவனம் (NPTI), மின்சாரத் துறை திறன் கவுன்சில், தேசிய பசுமை திறன் மேம்பாட்டுக் கழகம், பழங்குடியினர் விவகார அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றில் USAID நிதியுதவி திட்டங்களை வீணா ரெட்டி செயல்படுத்தியிருக்கிறார்.

மேலும், டிஜிட்டல் கட்டண மேம்பாடு, சுகாதாரம், வனவியல், கல்வி தொடர்பான திட்டங்களை ஊக்குவிக்கவும், மேற்பார்வையிடவும் அவர் பல மாநிலங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். நவம்பர் 2023-ல், அப்போதைய நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையில் நடந்த உலக கழிப்பறை தின நிகழ்ச்சியில் அவர் ஒரு பேச்சாளராக கலந்துகொண்டார். இதுமட்டுமில்லாமல் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராகப் பங்கேற்று பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். ஜூலை 2023-ல், இந்தியாவின் தலைமையில் G20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. பாஜக எம் பி ட்வீட்டின் மூலம் வீணா ரெட்டி பெயர் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play