விஜய் பேச்சுக்கு தமிழக மக்கள்தான் பதிலளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
Vijay: ``வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு; ஆனா..." - விஜய்க்கு வானதி சீனிவாசன் பதிலடி
பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் மீண்டும் பத்துக்கு, பத்து தொகுதிகளில் வெல்லப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான். இதில் எந்த மாற்றமும் கிடையாது. கோவையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.

சிறுவாணி அணையை ஆழப்படுத்துவதற்கோ, நீர்மட்டத்தை அதிகரிக்கவோ கேரள அரசாங்கத்துடன் பேச ஏன் தயங்க வேண்டும். உங்கள் கூட்டணியில் இருக்கிறவர்கள் தானே கேரளாவை ஆள்கிறார்கள். நீண்ட கால பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பற்றி இந்த அரசு யோசிப்பதே இல்லை.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. தேர்தல் வரப் போகிறது. 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது மட்டுமே ஒற்றைக் குறிக்கோள். தவெக தலைவர் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். உங்களுடைய கூட்டத்திற்காக புனிதத் தன்மையை அவமரியாதை செய்யக் கூடாது.
ரசிகர்களை தொண்டர்களாக மாற்றாவிட்டால், உங்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. எந்த பிரச்னையையும் உறுதியாக, முழுமையாக தெரிந்துகொள்ளாமல், ஏதோ ஒரு வசனத்தை பேசுவது என்றிருக்கிறார். விஜய் ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகப் படித்து தெரிந்து பேசவேண்டும்.
விஜய் மீனவர் பிரச்னை குறித்துப் பேசியுள்ளார். அவர் போராடிய 2011 மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. 2014க்குப் பிறகு அவர் மீனவர்களுக்காக போராடுகின்ற சூழல் வந்ததா? வரவில்லைதானே. பாஜக பாசிசம் வசனம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மை நீண்ட தூரம் தள்ளியிருக்கிறது.
அப்படியிருக்கும்போது அவர் பேசுவதற்கு மதிப்பு இருக்காது. கட்சி சார்பில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். சில நேரம் கட்சி நிகழ்ச்சிகளில் நானே கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை உடல்நலக்குறைவால் தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. “என்றார்.