Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!
தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/knaddz5w/IMG-20250131-WA00572.jpg)
கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலையில்தான் கட்சிக்கான மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்துக் கொண்டிருந்தார். நிர்வாகரீதியாக 234 தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்திருந்தார். அதில் 5 கட்டங்களாக 95 மாவட்டங்களுக்கான மா.செக்களையும் முக்கிய நிர்வாகிகளையும் அறிவித்து முடித்திருக்கிறார். இந்த சமயத்தில் அதிமுகவில் இருந்து சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனாவும் விஜய்யின் கட்சியில் இணைந்திருந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் பதவியையும் விஜய் வழங்கியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா முன்பு திமுகவுக்காக பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வேலைகளை பார்த்த போது அவருடன் இணைந்து பணியாற்றியவர். விஜய்யின் கட்சியில் ஆதவ் இணைவதற்கு முன்பும் பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டுதான் அந்த முடிவை எடுத்ததாக தகவல் உண்டு.
இந்நிலையில்தான், விஜய்யின் நீலாங்கரை வீட்டில் விஜய்க்கும் பிரஷாந்த் கிஷோருக்கும் இடையேயான இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
பிரஷாந்த் கிஷோர் மதியம் 2:30 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வந்திருக்கிறார். ஆதவ் அர்ஜூனாவின் குழுவை சேர்ந்தவர்கள்தான் அவரை வரவேற்று நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/msy3qmsr/images-2025-02-10T172236.395.jpeg)
சரியாக 3 மணிக்கு நீலாங்கரை இல்லத்தில் விஜய் - பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு தொடங்கியிருக்கிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் சாதக பாதகங்கள் என்ன என்பது பற்றி விஜய் பிரஷாந்த் கிஷோரிடம் கேட்டு தெரிந்துகொண்டதாக தகவல். #யார்_அந்த_சார் போன்ற Campaign களை சமீபத்தில் பிரஷாந்த் கிஷோர் டீம் அதிமுகவுக்கு வடிவமைத்துக் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2 மணி நேரத்தை கடந்த நிலையில் சுமார் 5.30 மணி அளவில் இந்த முக்கிய மீட்டிங் முடிந்திருக்கிறது.
பிப்ரவரி 23 ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் சூட்டிங்கை விஜய் முடிக்கவிருக்கிறார். அதன்பிறகு, சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டிருக்கிறார். சுற்றுப்பயணத்துக்கான திட்டமிடல் வேலைகளை ஆதவ்வின் VOC நிறுவனம் தொடங்கியிருப்பதாகவும் தகவல் சொல்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/6elb4cn2/IMG-20250201-WA00722.jpg)
விஜய் தனித்து போட்டியிடுவாரா அதிமுகவுடன் கூட்டணி செல்வாரா என்கிற விஷயம் பேசுபொருளாகியிருக்கும் சூழலில் விஜய் - பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play