Vizhinjam: `எங்கள் பார்ட்னர் அதானி' கேரள அமைச்சர் பேச்சு; `நல்ல மாற்றம்' பிரதமர் மோடி பாராட்டு
விழிஞ்ஞம் வர்த்தக துறைமுக திறப்புவிழா
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள விழிஞ்ஞம் அதானி வர்த்தக துறைமுக திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழிஞ்ஞம் துறைமுக திறப்பு விழாவில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யான காங்கிரஸ் முக்கிய தலைவர் சசிதரூர், கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேரள துறைமுகத்துறை அமைச்சர் வாசவன், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய மூவர் மட்டுமே பேசினர்.
கேரள துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் வரவேற்புரையின்போது, 'எங்கள் பார்ட்னர் அதானியை வரவேற்கிறேன்' என கூறினார்.
அமைச்சர் வாசவனின் பேச்சை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திரமோடி, 'தனியார் பங்களிப்பை வரவேற்று ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் பார்ட்னர் எனக்கூறியிருப்பது நல்லமாற்றம்' என கூறினார்.

`பலருடைய தூக்கத்தை கெடுத்துள்ளது' - பிரதமர் மோடி
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தியா கூட்டணியின் வலிமையான தூண் அல்லவா. சசிதரூர் மேடையில் இருக்கிறார். இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி பலருடைய தூக்கத்தை கெடுத்துள்ளது" என்றார்.
இந்தியா கூட்டணி குறித்து பேசி எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை மறைமுகமாக பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார்.
மொழிபெயர்ப்பு..
அதே சமயம் 'இண்டி அலைன்ஸ்' என பிரதமர் மோடி பேசியதை மலையாளத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் பள்ளிப்புறம் ஜெயக்குமார் `அலைன்ஸ்' என்பதை `ஏர்லைன்ஸ்' என தவறாக புரிந்துகொண்டு, 'நம் நாட்டின் ஏர்லைன்ஸ் சம்மந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்தார். இதை விழா மேடையில் இருந்தவர்கள் அருகில் உள்ளவர்களிடம் சொல்லி சிரித்துக்கொண்டனர்.

இதுகுறித்து மொழிபெயர்ப்பாளரும் இந்தி ஆசிரியருமான பள்ளிப்புறம் ஜெயக்குமார் கூறுகையில், "நான் பல ஆண்டுகளாக பிரதமர் மோடியின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்துவருகிறேன். இந்த மேடையில் மைக் பிரச்னை இருந்தது. அதனால் பிரதமர் பேசியது எனக்கு சரியாக கேட்கவில்லை. நான் தவறாக கூறியது பிரதமருக்கு புரிந்தது. உடனே நான் அதை திருத்தி கூற முயன்றபோது பிரதமர் பேசத்தொடங்கிவிட்டார். அதனால் நான் திருத்தாமல் அமைதியாகிவிட்டேன்" என்றார்.