செய்திகள் :

WPL : ஆச்சர்யம் தந்த 16 வயது தமிழக சென்சேஷன்; அதிர்ச்சி அளித்த `Unsold' - Auction Analysis

post image
மூன்றாவது வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலம் ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவில் நடந்தது. இந்த ஏலத்தில் சில அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் அரங்கேறியிருக்கின்றன. சில uncapped இந்திய வீராங்கனைகள் பெரும் தொகைக்கு வாங்கப்பட, பல முன்னணி வீராங்கனைகள் unsold ஆகியிருக்கிறார்கள். இரண்டு தமிழக வீராங்கனைகளும் இந்த ஏலத்தில் வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவைப் பற்றியும், இந்த ஏலத்துக்குப் பிறகு ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

இந்த மினி ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்டவர் இந்திய இளம் பேட்டர் சிம்ரன் ஷேக். 22 வயதான சிம்ரன் ஏற்கெனவே உபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். முதல் சீசனில் 5.8 என்ற சராசரியில் வெறும் 29 ரன்களே எடுத்திருந்த அவரை இரண்டாவது சீசனுக்கு முன்பாக வாரியர்ஸ் ரிலீஸ் செய்தது. கடந்த ஏலத்தில் யாராலும் வாங்கப்படாத அவர், சமீபமாக சிறப்பன ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த சேலஞ்சர்ஸ் தொடரில் சுமார் 200 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய அவரை வாங்க இந்த ஏலத்தில் நல்ல போட்டி நிலவியது. கடைசியில் டெல்லியின் சவாலை சமாளித்து அவரை 1.9 கோடிக்கு வாங்கியது குஜராத் ஜெயின்ட்ஸ்.

அதற்கு அடுத்து அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் ஸ்டார் டியாண்ட்ரா டாட்டின். குஜராத் ஜெயின்ட்ஸ் அணி இவரை 1.7 கோடிக்கு வாங்கியது. முதல் ஐபிஎல் ஏலத்தில் இதே குஜராத் அணி தான் அவரை வாங்கியிருந்தது. ஆனால் சீசன் தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்புக்கும் இடையே பிரச்னைகள் ஏற்பட்டதால் அவர் அத்தொடரிலிருந்து விலகினார். இப்போது அணியின் பயிற்சியாளர் குழுவில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவரை மீண்டும் வாங்கியிருக்கிறது ஜெயின்ட்ஸ்.

இவர்களுக்கு அடுத்து அதிக தொகைக்குப் போனவர் 16 வயது தமிழக சென்சேஷன் கமாலினி. இந்த இடது கை விக்கெட் கீப்பர் பேட்டரை வாங்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் இரண்டு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. மும்பைக்கு பேக் அப் விக்கெட் கீப்பர் தேவைப்பட்டது. தானியா பாட்டியாவை அப்கிரேட் செய்யவேண்டிய தேவை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இருந்தது. அதனால் இரு அணிகளும் தொடர்ந்து சண்டையிட்டன. கடைசியில் 1.6 கோடிக்கு அவரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 1.2 கோடிக்கு 23 வயது இளம் லெக் ஸ்பின்னர் பிரமிளா ராவத்தை வாங்கியது. ஆஷா ஷோபனா காயத்தால் அவதிப்பட்டுவருவதால் அவருக்கு பேக் அப் ஆப்ஷனாக பிரமிளாவை வாங்கியிருக்கிறது அந்த அணி. ஆந்திரா ஆல்ரவுண்டர் ஶ்ரீசரணியை 55 லட்ச ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் வாங்கியது. இவர்கள்தான் இந்த ஏலத்தின் டாப் 5 வீராங்கனைகள். இவர்கள் தவிர்த்து வாங்கப்பட்ட மற்ற 14 வீராங்கனைகளுமே அடிப்படை விலைக்குத்தான் வாங்கப்பட்டார்கள்.

இந்த ஏலத்தின் பெரிய அதிர்ச்சியெனில் முன்னணி இந்திய வீராங்கனை ஸ்னே ராணா வாங்கப்படாதது. முதல் சீசனில் பெத் மூனி காயமடைந்தபோது இவர்தான் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியை வழிநடத்தினார். ஆனால், அவரால் கடந்த 2 ஆண்டுகளாக பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் பெரிய பங்களிப்பைக் கொடுக்க முடியவில்லை. சர்வதேச டி20 அரங்கில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை. போக, டொமஸ்டிக் அரங்கிலும் அவர் செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால் அனைத்து அணிகளுமே இந்த ஏலத்தில் அவரைப் புறக்கணித்துவிட்டன. என்னதான் அவர் டி20 அரங்கில் பெரிதாக ஜொலிப்பதில்லை என்றாலும், இன்னும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அசத்திக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார். அந்த அளவுக்கு அனுபவம் கொண்ட ஒரு வீராங்கனையை அனைத்து அணிகளும் புறக்கணித்திருக்கின்றன என்பது பெரும் அதிர்ச்சி தான்.

ஸ்னே ராணா பொல், ஐபிஎல் அரங்கில் அவ்வளவாக சோபிக்காத முன்னாள் இந்திய வீராங்கனைகள் பூனம் யாதவ், மான்ஷி ஜோஷி, சுஷ்மா வெர்மா ஆகியோரும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.


வெளிநாட்டு வீராங்கனைகளில் இதற்கு முன் WPL அணிகளின் அங்கமாக இருந்த லாரன் பெல், லாரா ஹேரிஸ், இங்கிலாந்து கேப்டன் ஹெதர் நைட் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டும் எந்த அணிகளும் வாங்கவில்லை. பெரும் கவனத்தை ஈர்த்திருந்த அயர்லாந்து ஆல்ரவுண்டர் ஓர்லா பிரெண்டர்கார்ஸ்ட்டும் 5 அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார்.

இந்த ஏலத்தில் கமாலினி, ஜோஷிதா என இரண்டு தமிழ்நாடு வீராங்கனைகள் வாங்கப்பட்டிருக்கிறார்கள். சூப்பர் கிங்ஸ் அகாடெமியின் வளர்ப்பான இளம் கமாலினி மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருப்பது தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ஓப்பனராக இறங்கி அதிரடியாக ஆடக்கூடிய கமாலினி, இந்திய அண்டர் 19 அணிக்கு பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை யஸ்திகா பாட்டியா காயத்தால் அவதிப்பட்டால் அவருக்கு மும்பையின் ஓப்பனராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே அந்த அணியில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணன், தமிழ் பேசக்கூடிய சஜனா சஜீவன் ஆகியோர் இருப்பது நிச்சயம் கமாலினிக்கு பேருதவியாக இருக்கும்.

ஆல்ரவுண்டரான ஜோஷிதாவை அடிப்படை விலையான 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு. அந்த அணியில் ரேணுகா தாக்கூர் தவிர்த்து பெரிய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. போக, அவரும் ஐபிஎல் அரங்கில் சோபிக்கவில்லை. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசக்கூடிய ஜோஷிதாவுக்கு நிச்சயம் ஒரு கட்டத்தில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு


இந்த ஏலத்தில் அனைத்து ஓவர்சீஸ் ஸ்லாட்களையும் நிரப்பிவிட்டு பங்கேற்றிருந்த ஒரே அணி ஆர்சிபி மட்டும்தான். அதனால் அவர்கள் இந்திய வீராங்கனைகளில், பேக் அப் ஆப்ஷன்களில் கவனம் செலுத்தினார்கள். பிரமிளா ராவத் (ஆல்ரவுண்டர் - 1.2 கோடி), ஜோஷிதா (ஆல்ரவுண்டர் - 10 லட்சம்), ராகவி பிஷ்ட் (ஆல்ரவுண்டர் - 10 லட்சம்), ஜக்ராவி பவார் (ஆல்ரவுண்டர் - 10 லட்சம்) ஆகிய நால்வரை அந்த அணி வாங்கியது. காயத்தால் அவதிப்படும் ஆஷாவுக்கு பிரமிளா நல்ல பேக் அப். கனிகா அஹுஜா காயத்திலிருந்து திரும்பி வருவது அந்த அணியின் மிடில் ஆர்டரை இன்னும் பலப்படுத்தும். டேனியல் வயாட்-ஹாட்ஜ் டிரேட் செய்யப்பட்டிருப்பதால், ஓப்பனிங்குக்கு நல்ல பேக் அப் இருக்கிறது. எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் ஆகியோரின் ஃபார்ம், ஃபிட்னஸ் நன்றாக இருந்தால் நிச்சயம் பட்டத்தை தக்கவைக்க முடியும்.

டெல்லி கேபிடல்ஸ்


டெல்லி கேபிடல்ஸுக்கு இருந்த மிகப் பெரிய பிரச்னை விக்கெட் கீப்பர் மூலம் அவர்களுக்கு ரன் வராதது. அதனால் இந்த ஏலத்தில் அவர்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களை வாங்கியிருக்கிறார்கள். சாரா பிரைஸ், நந்தினி கய்ஷப் இருவரையும் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது கேபிடல்ஸ். நந்தினி கஷ்யப் இப்போது நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். WPL அணிகள் அசோசியேட் பிளேயர்களையும் சேர்த்து 5 வெளிநாட்டு வீரர்களை பிளேயிங் லெவனில் களமிறக்கலாம் என்பதால், அவர்கள் அந்த ஆப்ஷனையும் பயன்படுத்த முடியும். இவர்கள் போக, ஶ்ரீசரணி (ஆல்ரவுண்டர் - 55 லட்சம்), நிக்கி பிரசாத் (ஆல்ரவுண்டர் - 10 லட்சம்) ஆகியோரை அந்த அணி வாங்கியிருக்கிறது. ரிலீஸ் செய்த முன்னணி லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் இடத்துக்கு யாரையும் அவர்கள் வாங்கவில்லை. அதனால் அவர்களிடம் முன்னணி லெக் ஸ்பின்னரே இல்லை. ஆனால், அவர்கள் கடந்த 2 சீசன்களிலும்கூட பூனமை பெரிதாகப் பயன்படுத்தவில்லை என்பதால் அது அவர்களைப் பெரிதாக பாதிக்காது. மூன்றாவது ஃபைனலுக்கு நிச்சயம் வாய்ப்புண்டு.

மும்பை இந்தியன்ஸ்


கமாலினி (விக்கெட் கீப்பர் - 1.6 கோடி), நடீன் டி கிளார்க் (ஆல்ரவுண்டர் - 30 லட்சம்), அக்‌ஷிதா மஹேஷ்வரி (ஆல்ரவுண்டர் - 20 லட்சம்), சன்ஸ்கிரிதி குப்தா (ஆல்ரவுண்டர் - 10 லட்சம்) ஆகியோரை இந்த ஏலத்தில் வாங்கியிருக்கிறது மும்பை. யஸ்திகா காயத்தால் அவதிப்பட்டால், அவருக்கு பேக் அப் ஆக கமாலினி, ஷப்னிம் இஷ்மாய்லுக்கு பேக் அப் ஆக நடீன் டி கிளார்க் சிறப்பாக செயல்படுவார்கள். அந்த அணியில் பெரிதாக சிக்கல்கள் இல்லை என்பதால் அவர்கள் சரிசெய்ய இந்த ஏலத்தில் எதுவும் இருக்கவில்லை. நிச்சயம் இரண்டாவது கோப்பையை வெல்வதற்கு ஏற்ற அணி அவர்களிடம் இருக்கிறது.

உபி வாரியஸ்


டாட்டினுக்குக் கடுமையாகப் போட்டியிட்ட வாரியர்ஸ் கடைசியில் அலானா கிங்கை (ஸ்பின்னர் - 30 லட்சம்) தான் வாங்கியது. கிராந்தி கௌட் (ஆல்ரவுண்டர் - 10 லட்சம்), ஆருஷி கோயல் (பேட்டர் - 10 லட்சம்) ஆகியோரையும் இந்த ஏலத்தில் வாங்கியிருக்கிறார்கள். அவர்களின் பெரிய சிக்கலாக இருந்த வேகப்பந்துவீச்சை சரிசெய்யாமல் விட்டிருப்பது ஆச்சர்யமளிப்பதாகவே இருக்கிறது. பல வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்கள் இருந்தபோது கிங்கை வாங்கியது குழப்புவதாகவே இருக்கிறது. நிச்சயம் அந்த அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாகவே இருக்கிறது.

குஜராத் ஜெயின்ட்ஸ்


சிம்ரன் ஷேக் (பேட்டர் - 1.9 கோடி), டியாண்ட்ரா டாட்டின் (ஆல்ரவுண்டர் - 1.7 கோடி), டேனியல் கிப்சன் (ஆல்ரவுண்டர் - 30 லட்சம்), பிரகஷிகா நாயக் (ஸ்பின்னர் - 10 லட்சம்) என இந்த ஏலத்தில் 4 வீராங்கனைகள் வாங்கியது ஜெயின்ட்ஸ். இதன்மூலம் நிச்சயம் அந்த அணி முன்பைவிட பலமாகியிருக்கிறது. சிம்ரன் ஷேக் அந்த அனியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தியிருக்கிறார். டாட்டின் வந்திருப்பது பேட்டிங், வேகப்பந்துவீச்சு இரண்டையுமே பலப்படுத்தும். அதேசமயம் அவர்களின் ஸ்பின் அட்டாக் பெரும்பாலும் ஆஷ் கார்ட்னரையே நம்பியிருக்கும். அதை கொஞ்சம் பலப்படுத்தியிருக்கலாம்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

Aus v Ind : 'ஒயில்ட் ஃபயராக ஹெட்; இந்தியாவை காப்பாற்றிய பும்ரா' - இரண்டாம் நாளில் என்ன நடந்தது?

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 405 ரன்களை எடுத்து ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக... மேலும் பார்க்க

Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதானா?

குகேஷ் தமிழரா தெலுங்கரா என ஒரு பட்டிமன்றமே ஓடிக்கொண்டிருக்கிறது. 130 ஆண்டுகளுக்கும் மேலான செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக இளம் வயதில் சாம்பியனாகியிருக்கும் சாதனையாளர். இவருக்கு முன்னால் ரஷ்ய ஜாம்பவா... மேலும் பார்க்க

Gukesh: சந்திரபாபு நாயுடுவின் `Telugu boy' பதிவும் இணையத்தில் வெடித்த கருத்து மோதலும்!

ஸ்டாலின்`தமிழ்நாடு உன்னால் பெருமை கொள்கிறது’குகேஷ், 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உலகிலேயே மிகச் சிறிய வயதில் உலக சாம்பியன் ஆனவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரின் தாய்மொழ... மேலும் பார்க்க