ஃபென்ஜால் புயலால் மின்வாரியத்துக்கு ரூ. 5,000 கோடி வரை இழப்பு
சென்னை: ஃபென்ஜால் புயல் காரணமாக மின்வாரியத்துக்கு ரூ. 5,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வெள்ள பாதிப்புக்குள்ளான இந்த மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், துணை மின் நிலையங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்தன. இதன்மூலம், ரூ. 3,000 கோடி முதல் ரூ. 5,000 கோடி வரை மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியது:
மின்வாரியத்தின் கடன் சுமை ஒவ்வொரு நிதியாண்டும் அதிகரித்து வரும் நிலையில், அக்.31 நிலவரப்படி, கடன் ரூ. 1.66 கோடியை எட்டியுள்ளது. வரும் நிதியாண்டில் இந்தக் கடன் சுமை மேலும் அதிகரித்து ரூ. 1.80 லட்சம் கோடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது புயலால் ஏற்பட்டுள்ள சேதம் மின்வாரியத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகள் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளின் மின்வாரியத்தின் மறுகட்டமைப்புக்கு அவசர நிதியை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.