கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்
அகத்தியா விமர்சனம்: `வாட் ப்ரோ... இட்ஸ் வெரி ராங் ப்ரோ!' சித்த மருத்துவம் x அலோபதி விவாதம் தேவைதானா?
சினிமாவில் கலை இயக்குநராக விரும்பும் அகத்தியன் (ஜீவா) பாண்டிச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். ஷூட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பியானோ அவர்களிடம் கிடைக்கிறது. அதை வாசிக்கத் தொடங்க, சில அமானுஷ்ய நிகழ்வுகளால் படப்பிடிப்பு நின்று போகிறது. இதனால் உடைந்த அகத்தியன், சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்கிறார்.

அங்கே பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக மாற்றி, காசு சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை நாயகி (ராஷி கண்ணா) கொடுக்க, மீண்டும் பாண்டிச்சேரிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார்கள். இம்முறை அந்த பங்களாவில் ஒரு பழைய பிலிம் ரோல் ஒன்று கிடைக்கிறது. அதில் சித்தார்த்தன் (அர்ஜுன்) என்கிற சித்த மருத்துவர், 1940-ல் நடந்த கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அந்த கதையில் நடந்தது என்ன, நிகழ்காலத்தில் நடக்கும் அமானுஷ்யங்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்பதைக் கலந்து கட்டிக் கொடுத்திருப்பதே ‘அகத்தியா’ படத்தின் கதை.
ஆஹா… ஒஹோ.. என்று பாராட்டிச் சொல்லப் பெரிதாக எந்த காட்சிகளும் இல்லாமல் போனாலும், கதைக்குத் தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார் ஜீவா. ஒரு படத்தைத் தன் தோளில் சுமந்து செல்லும் திறன்மிக்க நடிகரான அவருக்கு, கதை தேர்வில் இன்னும் கூடுதல் கவனம் தேவை. பிரெஞ்சு நாட்டிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சித்த மருத்துவராக அர்ஜுன். செயற்கையான கதாபாத்திரமாகத் தட்டுப்பட்டாலும், தன் கம்பீர நடிப்பால் அதை ரசிக்கும்படி மாற்றிவிடுகிறார். டெம்ப்ளேட் நாயகியாக வரும் ராஷி கண்ணாவுக்குப் பெரிதாக வேலையில்லை. மற்றொரு நாயகியாக நடித்துள்ள மாடில்டா, தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

வில்லனாக எட்வர்ட் சோனென்ப்ளிக், சர்வாதிகாரிக்கான தோரணையுடன் மிரட்டுகிறார். சில இடங்களில் அதீதமாகத் தெரியும் அந்த வில்லத்தனம் நம்மைச் சோதிக்கும் முயற்சி. வாய்ஸ் வால்யூமைக் குறைத்து, காமெடியையும் குறைத்திருக்கிறார் ஷாரா. காமெடி என்கிற பெயரில் நம் பொறுமையைச் சோதிக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. இதுபோக ராதாரவி, நிழல்கள் ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி எனப் பலர் எமோஷன், காமெடி என ஆளுக்கொரு தொகுதியாகப் பிரித்துப் பங்காற்றியிருக்கின்றனர்.
இந்தப் படத்தின் கதாநாயகன் நிச்சயமாகக் கலை இயக்குநர் பி.சண்முகம்தான். நிகழ்காலத்தில் வரும் பேய் பங்களா, கடந்த காலத்தில் வரும் பேலஸ் என இரண்டுமே ஒரே இடம்தான் என்றாலும் அதற்கிடையேயான வேறுபாட்டினை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே வரும் ஓவியங்களும் சிறப்பு. அவரது உழைப்பை அத்தனை சிரத்தையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தீபக் குமார் பதி. பீரியட் காலத்தின் ஒளியுணர்வு பேண்டஸியான பீல் கொடுக்கிறது. கிராபிக்ஸில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இறுதி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் ‘பிளே ஸ்டேஷன் 4' கேம் மோடினை ஆன் செய்து செயற்கையான உணர்வை மட்டுமே கொடுக்கிறது.

ஆடை வடிவமைப்பாளர்களான பல்லவி சிங், டினா ரொசாரியோ தங்கள் பங்குக்கு கலர் பேலட்டில் ப்ரேம்களை அலங்கரித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் ’என் இனிய பொன்நிலாவே’ என்கிற இளையராஜா பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனும், பின்னணி இசையில் பீத்தோவனின் ’பர் எல்லிஸ்’ பிஜிஎம்மும் மட்டுமே மனதில் நிற்கின்றன. நமது ஒரிஜினல் கம்போஸர் யுவன் எங்கே? படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குச் செல்லும் திரைக்கதையைக் குழப்பமில்லாமல் கோத்திருக்கிறார். ஆனாலும், இரண்டாம் பாதியில் நீண்டுகொண்டே செல்லும் காட்சிகளின் மீது இத்தனை இரக்கம் தேவையில்லை.
சில பல கிளிக் ஆகாத நகைச்சுவை காட்சிகளோடு சாதாரண பேய் படமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, ஒரு பழைய பிலிம் ரோலால் வரலாற்றுப் புனைவாக மாறுகிறது. அங்கே சித்த மருத்துவராக வரும் அர்ஜுன், மாற்றுத்திறனாளியாக இருக்கும் பிரஞ்சு ஆளுநரின் தங்கையை 48 நாட்களில் குணப்படுத்துவதாகச் சவால் விடுகிறார். நாமும் திரைக்கதை ’பத்திக்கிச்சு’ என்று நிமிர்ந்து உட்கார, வெறும் 'மோட்டிவேஷன் ஸ்பீச்' கொடுத்துக் கையை அசைய வைக்கும் அவரது யுக்திகளைப் பார்த்து அணைந்தே போகிறோம். அதேபோல மதம் கொண்ட யானையை மூலிகையைக் கொண்டு நிற்க வைக்கும் காட்சியைப் பார்த்து, படத்தைச் சுவாரஸ்யமாகப் பார்ப்பதற்கும் திரைக்கதை மூலிகை ஏதாவது உண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.

முதன்மை கதாபாத்திரங்கள் தவிர்த்து மற்ற பாத்திரங்கள் மந்திரம் போட்டதாக மறைகிறார்கள். உதாரணமாக ஜீவாவின் நண்பர்கள் கூட்டம், வில்லனுக்கு பில்டப் வர்ணனையைப் போட்டுக் காணாமல் போகும் நிழல்கள் ரவி ஆகியோரைச் சொல்லலாம். அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் மிகவும் மேலோட்டமாகச் சொல்லப்பட்ட உணர்வையே கொடுக்கின்றன. இது, ஜீவா தனது தாயை எவ்வாறு காப்பாற்றப் போகிறார் என்கிற பதற்றத்தை எங்குமே கொடுக்கவில்லை. அதே நேரத்தில் மற்றொரு கதையில் எதற்கெடுத்தாலும் மூலிகைகளை வைத்துக் குணப்படுத்தும் காட்சிகள் கிலோ கணக்கில் தூவப்பட்டதால், அடுத்து என்ன என்பதை எளிதாகக் கணிக்க முடிகிறது.
சித்த மருத்துவத்தைப் புகழ்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் நம்பத்தகுந்த ஆதாரங்களோடு அதைச் சொல்வதே சிறந்தது. போகிற போக்கில் வாட்ஸ்அப் பார்வேர்டுகளை எல்லாம் அடித்து நொறுக்குவது ‘பக்’கென தூக்கிவாரி போடுகிறது. அதிலும் கீமோதெரபியையும், ஆங்கில மருத்துவத்தையும் போட்டிக்கு அழைத்துப் புற்றுநோய்க்கு மருந்திருக்கிறது என்று எல்லை மீறுவதெல்லாம் இயக்குநர் பா.விஜய்யைப் பார்த்து “வாட் ப்ரோ... இட்ஸ் வெரி ராங் ப்ரோ” என்றே சொல்ல வைக்கின்றன.
ஒரு காட்சியில் ஏழு கோள்கள் ஒன்று சேரும் நேரத்தில் பிறந்தார் ஜீவா என்கிறார்கள், படத்தின் இறுதிக் காட்சியில் அதே நிகழ்வை 80 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வு என்கிறார்கள். (ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா..?). இப்படி ‘ஒன்பது கோள்களிலும் லக்கனம் பெற்ற ஒருவன்’ என்ற அதீத லாஜிக் மீறல்கள் கணக்கே இல்லாமல் படத்தில் கிரிவலம் ஏறுகின்றன.

மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியாகப் பலமாகச் சூத்திரம் போட்டாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதை, ஆழமில்லாத கதாபாத்திர வடிவமைப்பு, தேவைக்கு அதிகமான லாஜிக் மீறல்கள் எனப் பலவீனமான செய்முறையால் வேலை செய்யாத மருந்தாகிப் போகிறான் இந்த 'அகத்தியா'.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel