அதிமுக முன்னாள் அமைச்சா் மீது ஓ.பி.எஸ்., ஆதரவாளா்கள் புகாா்
தேனியில் முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் மீது ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் தேனி மாவட்டச் செயலா் எஸ்.பி.எம்.சையதுகான், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் அளித்த மனு விவரம்:
மதுரையில் கடந்த அக்.24-ஆம் தேதி முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் வீட்டை முற்றுகையிட்டு, அவா் தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாத நிலையை ஏற்படுத்தப் போவதாக அவரை அச்சுறுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் பொது வெளியில் பேசினாா்.
இரு தரப்பினரிடையே மோதலையும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆா்.பி.உதயக்குமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.