`அப்பாவுக்கு துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றியவர்!’ - அன்புமணியை விளாசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மாவட்டம் மற்றும் நகர தி.மு.க சார்பில், `ஓரணியில் தமிழ்நாடு' தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ``தி.மு.க-வின் தொண்டர்கள் கொள்கை வீரர்களாக இருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் நாடே முடங்கியிருந்த நேரத்தில், களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்கள் தி.மு.க-வினர். அதன்பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்தார்கள்.
தற்போது புதிதாக ஒரு நடிகர் வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் வெளியே வராத, மக்களை சந்திக்காத அந்த நடிகர், தற்போது தேர்தல் வருவதால் வந்திருக்கிறார்.

சுந்தரா டிராவல்ஸ் போல பச்சைப் பேருந்தில் ஒருவர் வருகிறார். காவிப் பேருந்தில் வேறு ஒருவர் வருகிறார். ஆனால் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களை சந்திக்கிறார்.
அவர்களின் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பா.ம.க அன்புமணி பச்சையாகப் பொய் பேசுகிறார். அப்பாவுக்கு துரோகம் செய்த அவர், மக்களுக்காக என்ன செய்தார் ?
பதவிக்காக முகவரியை மாற்றி கட்சியைக் கைப்பற்றியவருக்கு, தி.மு.க-வைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது ? தி.மு.க கூட்டணியில் இருந்தபோதுதான் அவர் மத்திய அமைச்சரானார். அதனால் தி.மு.க-வைப் பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை” என்றார்.