'சிரஞ்சீவி, சிவாஜிக்குக் கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுது? இதெல்லாம்'- செல்லூர் ராஜு
சிரஞ்சீவி, சிவாஜிக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாடியிருக்கிறார்.
இதுதொடர்பாக நேற்று(செப்.21) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜு, "இந்த ரசிகர் கூட்டத்தை எல்லாம் பார்த்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சிரஞ்சீவிக்குக் கூடாத கூட்டமா? சிவாஜிக்குக் கூடாத கூட்டமா? பாக்யராஜ், டி.ராஜேந்தருக்கு கூடாத கூட்டமா? அடுக்கு மொழியில் பேசக்கூடிய எத்தனை பேரைப் பார்த்திருப்பார்கள் மக்கள்.
எனவே, கூட்டத்தை வைத்தெல்லாம் மதிப்பிடக்கூடாது. நடிகர் என்றாலே கூட்டம் கூடத்தான் செய்யும்.
விஜய் ஒரு முன்னணி நடிகர். கதாநாயகனாக நடித்தவர். அவருக்கு என ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதையெல்லாம் நான் குறை சொல்லவில்லை. அந்த ரசிகர்களைப் பக்குவப்படுத்தி கொண்டுசெல்ல வேண்டும்.
சிவாஜி கணேசனை நம்பி வந்தவர்கள் எல்லாம் எங்குபோனார்கள். முகவரி இல்லாமல் போய்விட்டார்கள். காங்கிரஸில் இருந்து பல கட்சிகள் மாறி முக்கியத்துவம் இல்லாமல் போனார்கள்.

பாக்யராஜ் தொடங்கி பலருக்கும் இதே கதை தான். நான் குறை சொல்ல வேண்டும் எனச் சொல்லவில்லை. கூட்டத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.