அமித் ஷா vs கனிமொழி: தமிழ் அகதிகள் பற்றி திமுக பேசவில்லையா? - வீடியோவுடன் பதிலளித்த கனிமொழி!
நாடாளுமன்றத்தில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025-ன் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதவின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்து பேசிய அமித் ஷா, அகதிகளுக்கென்று தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறினார்.
அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலளித்த கனிமொழி இந்த மசோதாவில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும் கூறினார்.

கனிமொழியின் உரையில், "இந்த புதிய மசோதாவின் கடுமையான விதிகள், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும். இது வெளிநாட்டு மாணவர்களுக்கு, இந்தியாவை ஒரு கல்வி இலக்காக தேர்ந்தெடுப்பதில் தயக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், அகதிகள் மற்றும் நாடற்ற நபர்கள் கல்வி, மருத்துவ சிகிச்சை, வசிப்பிடம் ஆகியவற்றைப் பெறுவதைக் கடினமாக்கும்" என்று பேசினார்.
அத்துடன், "இந்த மசோதாவின் மாற்றங்கள், தற்போது இந்தியாவில் வாழும் 90,000 இலங்கைத் தமிழ் அகதிகளை கடுமையாகப் பாதிக்கும். இவர்களில் பெரும்பாலானோர் முப்பது ஆண்டுகளுக்கும்மேலாக இந்தியாவில் வசித்து வருகின்றனர். இதற்கு பரிந்துரையாக, இலங்கைத் தமிழ் அகதிகளை நீண்டகால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும்.

20 ஆண்டுகளுக்குமேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கு பிறந்தவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அமித் ஷா, "திமுக தமிழ் அகதிகளுக்கு முதுகைக் காட்டியுள்ளது என்றும், 10 ஆண்டுகளாக தன்னிடம் யாரும் தமிழ் அகதிகள் பிரச்னையை எழுப்பவில்லை" என்றும் விமர்சித்துள்ளார் அமித் ஷா.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுக எம்பிக்கள் தமிழ் அகதிகள் பிரச்னையை எழுப்பவில்லை எனக் கூறுவது தவறானது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் கனிமொழி.
Home Minister @AmitShah's claim that the DMK has not raised the issue of Sri Lankan Tamil refugees with the Union government is incorrect. I raised the issue of Sri Lankan Tamil refugees in the Rajya Sabha as early as December 2009, demanding legal clarity and citizenship.… pic.twitter.com/FCTCX7d300
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 28, 2025
அவரது பதிவில், "மத்திய அரசிடம் திமுக எம்.பிக்கள் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்னையை எழுப்பவில்லை என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்று தவறானது.
இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்னையை 2009 டிசம்பரில் மாநிலங்களவையில் எழுப்பி, சட்ட தெளிவு மற்றும் குடியுரிமை கோரிப் பேசினேன். 2009, 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளின் நாடாளுமன்ற பதிவுகள் இதற்கு சான்றாக உள்ளன.
இது ஒரு புதிய கவலை அல்ல. நமது மக்கள் மீதான அர்ப்பணிப்பினால் மட்டுமே நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம் - எந்தப் பாராட்டையும் எதிர்பாராமல்.
இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண தனிப்பட்ட சந்திப்பை நாடுவது உதவும் என்றால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு தயங்க மாட்டார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதனுடன் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நாடாளுமன்றத்தில் இலங்ககை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்களை வலியுறுத்தி பேசிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.