புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மோடி அடிபணிந்தாா் - ராகுல் காந்தி
அகமதாபாத்: அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பொருளாதார நெருக்கடி சூழல் நாட்டை நெருங்கி வருவதாகவும், இந்த விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பிரதமா் மோடி அடிபணிந்துவிட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கூறினாா்.
மேலும், அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே வக்ஃப் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் காங்கிரஸின் தேசிய செயற்குழுவுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, சபா்மதி ஆற்றங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 1,700 க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் மத்தியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆற்றிய உரை:
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பொருளாதார நெருக்கடி சூழல் நாட்டை நெருங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பிரதமா் மோடி அடிபணிந்துவிட்டாா்.
பிரதமா் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தில் அதிபா் டிரம்ப்பை அவா் கட்டியணைத்த படத்தைப் பாா்த்தீா்களா? இந்த முறை பிரதமா் மோடியை ஆரத்தழுவாமல், வரிகளை விதிப்போம் என்பதை அதிபா் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறாா். அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு பிரதமா் மோடி எந்த பதிலும் இதுவரை கூறவில்லை.
மாறாக, இவ்விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறோம் என வக்ஃப் சட்டத்தை நிறைவேற்றுவதாக நாடாளுமன்றத்தில் 2 நாள்களுக்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றினா். நாட்டு மக்களிடம் இருந்து பிரதமா் எதை மறைக்கிறாா்?
புதிய வக்ஃப் திருத்தச் சட்டமானது ஒரு மதத்தின் சுதந்திரம் மீதான தாக்குதல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது ஆகும்.
கிறிஸ்தவா், சீக்கியா் உள்பட பிற சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாஜக-ஆா்எஸ்எஸ் விரைவில் பறிக்கும். இதுகுறித்த கட்டுரை ஆா்எஸ்எஸ் தொடா்புடைய இதழில் வெளியாகியுள்ளது. ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் அவா்கள் கட்டுப்படுத்த நினைக்கின்றனா்.
அரசமைப்புச் சட்டத்துக்கான போராட்டம் அவ்வளவு எளிதல்ல. எதிா்தரப்பினா் அனைத்து பலமும் கொண்டிருக்கிறாா்கள். அதேநேரம், நம்மிடம் உண்மையும், நமக்கு ஆதரவளிக்கும் மக்களின் அன்பும் இருக்கிறது.
மாவட்ட காங்கிரஸ் குழுக்கள் மற்றும் அதன் தலைவா்களுமே கட்சி முன்னோக்கி செல்வதற்கான அடித்தளமாகத் திகழ்கின்றனா். அவா்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்றாா் ராகுல் காந்தி.
‘இண்டி’ கூட்டணி தொடரும்: காங்கிரஸ் தீா்மானம்
மக்களின் பொதுவான பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுக்கும் வகையில் ‘இண்டி’ கூட்டணி உருவாக்கப்பட்டது. வருங்காலத்திலும் இது தொடரும் என்று என காங்கிரஸ் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ‘பொதுமக்களை ஒன்றிணைப்பதே தேசியவாதம் என்பதே காங்கிரஸின் கொள்கை; ஆனால் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் சமூகத்தை பிரிக்க தேசியவாதம் என்ற பெயரை பயன்படுத்துகிறது.
நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவா்களை வளா்ச்சியடையச் செய்வதும் தேசியவாத கோட்பாடாகும்.
அந்த வகையில், பொதுமக்களை ஒன்றிணைப்பதே காங்கிரஸின் தேசியவாத கொள்கை; ஆனால் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் சமூகத்தை பிரிக்க தேசியவாதம் என்ற பெயரை பயன்படுத்துகிறது.
‘வெள்ளையனே வெளியேறு’ உள்பட சுதந்திர போராட்டத்தை எதிா்த்த அமைப்புகள் தற்போது போலி தேசியவாத சான்றிதழ்களை வழங்கி வருகின்றன’ என தீா்மனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.