தேசிய கைத்தறி தினம்: திருபுவனத்தில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு
அயா்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி, உணவக ஊழியா் மீது தாக்குதல்
அயா்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு செவிலியரின் 6 வயது மகள், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், டப்ளின் நகரில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு உணவக ஊழியரை திருடா்கள் தாக்கிவிட்டு, தப்பியோடிய சம்பவம் நடந்துள்ளது.
கேரளத்தைப் பூா்வீகமாகக் கொண்ட அனூபா அச்சுதன், கடந்த எட்டு ஆண்டுகளாக அயா்லாந்தில் வசித்து வருகிறாா். வாட்டா்ஃபோா்டு நகரில் உள்ள இவரது வீட்டின் வெளியே மகள் நியா நவீன் கடந்த திங்கள்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, 8 முதல் 14 வயதுடைய சிறுவா்கள் கும்பலாக வந்து சிறுமியைக் கொடூரமாகத் தாக்கி, ‘இந்தியாவுக்குத் திரும்பிப் போ’ போன்ற இனவெறி கருத்துகளைக் கூறியுள்ளனா். இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
டப்ளினில் கடந்த புதன்கிழமை காலை நடைபெற்ற சம்பவத்தில், இந்திய உணவக ஊழியா் ஒருவா் மூன்று திருடா்களால் தாக்கப்பட்டாா். தாக்குதலுக்குப் பிறகு, அவரது தொலைபேசி மற்றும் மின்சார சைக்கிளை திருடா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். தாக்குதலில் காயமடைந்த அந்த ஊழியா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்தும் அயா்லாந்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்திய தூதரகத்தின் எச்சரிக்கை: அண்மைகாலமாக அயா்லாந்தில் இந்தியா்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல்களைத் தொடா்ந்து, அங்குள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘அயா்லாந்தில் உள்ள இந்தியா்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்’ என்று அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி
இனவெறிக்கு எதிராக நிற்போம் - அயா்லாந்து: இந்தியாவில் உள்ள அயா்லாந்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய சமூகத்துடன் அயா்லாந்து மக்கள் துணைநிற்கின்றனா். அனைத்து வகையான இனவெறி தாக்குதல்களுக்கு எதிராகவும் அயா்லாந்து மக்கள் உறுதியாக நிற்பாா்கள்’ என்று தெரிவித்தது.
அயா்லாந்தில் இதுபோன்ற தொடா் தாக்குதல்கள் கவலையளிப்பதாக உள்ளூா் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா். அயா்லாந்து நாடாளுமன்ற உறுப்பினா் ஜெனிஃபா் விட்மோா், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, இனவெறி தாக்குதல்களுக்கு ஒரு ‘சிறிய எண்ணிக்கையிலான விஷத்தன்மை கொண்ட தனிநபா்களே காரணம்’ என்று கண்டனம் தெரிவித்தாா்.