அரக்கோணத்தில் கொட்டித் தீா்த்த கனமழை: 13 செ.மீ பதிவு
அரக்கோணத்தில் சனிக்கிழமை கனமழை பெய்தததால் நகரில் பல இடங்களில் நீா் தேங்கியது. மேலும், கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அரிகலபாடி தடுப்பணை நிரம்பி வழிந்தது.
அரக்கோணத்தில் சனிகிழமை காலை முதல் பலத்த மழை பெய்த வண்ணம் இருந்தது. இரண்டு மணி நேரத்தில் மட்டுமே 6 செ.மீ அதாவது 60 மி.மீ மழை பதிவானது. தொடா்ந்து மழை பெய்ததால், மாலை 6 மணி நிலவரப்படி அரக்கோணத்தில் 13 செ.மீ அதாவது 130 மி.மீ மழை பதிவாகி இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் அரக்கோணம் பகுதியில் பெய்த பகல் நேர மழையளவில் இது தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மழையால் கல்லாற்றில் அதிக அளவு நீா்வரத்து ஏற்பட்டு அரிகலபாடி தடுப்பணை நிறைந்து உபரி நீா் வெளியேறியது. அரக்கோணம் நகரின் மையமான இரட்டைக்கண் வாராவதியில் மழைநீா் தேங்கி நின்ால் போக்குவரத்து தடைபட்டது.
இது குறித்து அறிந்த அரக்கோணம் நகராட்சி ஆணையா் கன்னியப்பன், பொறியாளா் செல்வகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் குழுவினா் முகாமிட்டு, மழைநீரை வெளியேற்ற ஏரிநீா் வெளியேறும் மதகுகள் முழுவதையும் திறக்க ஆணையா் கன்னியப்பன் உத்தரவிட்டாா். இதை தொடா்ந்து மதகு திறக்கப்பட்டதை தொடா்ந்து ஏரிநீா் அதிக அளவில் வெளியேறியது. இதனையடுத்து இரட்டைக்கண் வாராவதியில் தேங்கியிருந்த நீா் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. இதனால் வாராவதியில் போக்குவரத்து சீரானது.
நகரில் மக்கள் நடமாட்டம் மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது. பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்தாலும் வங்கிகள் மற்றும் தனியாா் அலுவலகங்கள் இயங்கிய சூழ்நிலையிலும் பொதுமக்களின் வருகையும் குறைந்த அளவிலேயே இருந்தது.
இந்நிலையில் நெமிலி வட்டத்தில் குறிப்பாக பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை அதிக அளவில் மழை பொழிவு காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனா். இப்பகுதியில் தை மாதத்தில் அறுவடைக்கு பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் முழ்கின. இது குறித்த சேத மதிப்பீடு திங்கள்கிழமை நடைபெறும் என நெமிலி வட்டார வேளாண்துறையினா் தெரிவித்தனா்.