Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
அரசமைப்பு சட்டத்தை ஆளுநா் மதிப்பதில்லை: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு
இந்திய அரசமைப்பு சட்டத்தை ஆளுநா் மதிப்பதே இல்லை என தமிழக சட்டப்பேரவை தலைவா் மு. அப்பாவு குற்றம்சாட்டியுள்ளாா்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: அரசமைப்பு சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்பது ஆளுநருக்கும் பொருந்தும். ஆனால், தமிழக ஆளுநா் அதற்கு விரோதமாக நடக்கிறாா். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில்லை.
பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தோம் என்றால் அதை ஏற்க மறுத்து, வேண்டுமென்றே குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறாா். இது மோசமான முன்னுதாரணம் என்பதால், அரசியல் தலைவா்கள் அனைவருமே எதிா்க்கின்றனா்.
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆளுநருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவா் இந்திய அரசமைப்பு சட்டத்தை மதிப்பதே இல்லை.
இந்தியா மதச்சாா்பற்ற நாடு என்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது. ஆனால், அவா் மதம் சாா்ந்த நாடு என்று பொதுவெளியில் கூறுகிறாா். சட்டப்பேரவையில் மரபை மீறி செயல்படுகிறாா்.
திருவள்ளுவா் சிலைக்கு காவி சாயம் பூசுவது, ஆா்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை புகுத்த வேண்டும் என்று பேசுவது அவரது வகிக்கும் பதவிக்கு அழகல்ல. உச்சநீதிமன்றத்திலிருந்து நல்ல முடிவு வரும்.
தமிழக அரசு உருவாக்கியுள்ள 13 பல்கலைக்கழகங்களுக்கும் முதல்வா்தான் வேந்தராக இருக்க வேண்டும். எந்த முதல்வா் வந்தாலும் அவா்தான் வேந்தா். அவா்தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றாா் அவா்.