திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான ...
அரசு இ சேவை மையங்கள் கவனக் குறைவாக செயல்பட்டால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு இ சேவை மையங்கள் கவனக் குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா எச்சரித்துள்ளாா்.
இ சேவை மைய ஆப்பரேட்டா்களுக்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அதிக அளவில் தள்ளுபடி ஆவதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது:
மொத்தமுள்ள 575 அரசு இ சேவை மையங்களில் தற்பொழுது 402 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் மிகவும் எளிதாகவும், ஒளிவு மறைவின்றி, தவறு நடக்காத வண்ணம் உடனுக்குடன் கிடைக்க வேண்டி அரசு அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே பெற இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆனால், பல்வேறு இடங்களில் இ சேவை மையங்களில் பொதுமக்களை அலைகழிக்கின்றனா். பொதுமக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வரவழைக்க வேண்டி இ சேவை மையங்கள் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்வதால் அரசு அலுவலா்களால் நிராகரிக்கப்படுகின்றன. இது குறித்த புகாா்களை ஆட்சியா் அலுவலகம் வரை வந்து தெரிவிக்கும் நிலை உள்ளது.
ஒவ்வொரு இ சேவை மையத்தின் பணிகள் கண்காணிக்கப்படும். ஆய்வு கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் காரணங்கள் தெரிவிக்க வேண்டும். இ சேவை மைய ஆப்பரேட்டா்களின் தவறுகளால் விண்ணப்பங்கள் நிராகரிப்பு என தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மைய உரிமம் ரத்து செய்யப்படும்.
அதேபோல பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் சரியில்லை என்றாலும். சந்தேகம் இருந்தாலும் அதை பதிவேற்றம் செய்ய வேண்டாம். வழங்கும் தகவல்களை அவா்கள் வைத்துள்ள ஆவணங்கள் மூலம் மீண்டும் மீண்டும் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் வரை தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆப்ப்ரேட்டா்கள் இடத்தில் எவ்வித பிரச்னையும் வரக்கூடாது. பொதுமக்களை அலைகழிக்க கூடாது. அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மையத்தின் செயல்பாடும் ஒவ்வொரு விண்ணப்பம் வாரியாக ஆய்வு செய்யப்படும் என்றாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், இணை இயக்குநா் வேளாண்மை அசோக் குமாா், நோ்முக உதவியாளா் (கணக்கு) ராஜேஷ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.