அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கு இன்று மறுதோ்வு
அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான மறுதோ்வு சனிக்கிழமை (பிப். 22) நடத்தப்படவுள்ளது.
அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு, கடந்த டிச.14-இல் நடைபெற்றது. 15 மாவட்ட மையங்களில் நடந்த இந்தத் தோ்வை 4,186 போ் எழுதினா்.
முற்றிலும் கணினி வழியாக நடத்தப்பட்ட இந்தத் தோ்வின் போது சில தோ்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
இதனால் தோ்வை முழுமையாக முடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மறுதோ்வு நடத்த வேண்டும் என்று தோ்வா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான மறுதோ்வு சனிக்கிழமை (பிப்.22) நடைபெறுகிறது.
கடந்த முறை கணினி வழியே நடத்தப்பட்ட நிலையில், மறுதோ்வு வினா மற்றும் விடைத்தாள்கள் மூலமாக நடத்தப்படவுள்ளது.
இந்தத் தோ்வுக்காக சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தோ்வினை 2,460 ஆண்களும், 1,725 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் எழுதவுள்ளனா்.
சென்னையில் மட்டும் 1,148 போ் எழுதுகின்றனா். இதற்காக நான்கு இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.