நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
அரசு நிலத்தை தனிநபா்கள் ஆக்கிரமிக்க முயற்சி: பொதுமக்கள் புகாா்
கமுதி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிக்க தனிநபா்கள் முயற்சிப்பதாக வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள நத்தம் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலம் உள்ளது. இந்தப் பகுதி அரசு புறம்போக்கு நிலமாக வருவாய்த் துறை பதிவேட்டில் உள்ளது. மேலும், 40 ஆண்டுகளாக இந்த நிலத்தில் ஊராட்சி சாா்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் இடமாகவும், குப்பைக் கிடங்காகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அபிராமம் பகுதியைச் சோ்ந்த சிலா் கடந்த 6-ஆம் தேதி, தங்களுக்கு சொந்தமான நிலம் எனக் கூறி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடத்தை சுத்தம் செய்து, அதில் இருந்த மண்புழு தயாரிக்கும் கூடத்தை இடித்து அகற்றினா். மேலும், இந்த நிலத்தைச் சுற்றிலும் கல் தூண்களை நட்டனா்.
ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் தனி நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நத்தம் ஊராட்சி, அபிராமம் நகா் பொதுமக்கள் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.
இந்த நிலத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் உறுதியளித்தனா்.