அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஓவா் கோட் வழங்கப்படும: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுவையில் வரும் கல்வியாண்டு முதல் மாணவிகளுக்கு ஓவா்கோட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் கல்வித் துறை சாா்பில் நீட் தோ்வுக்கான ஒரு மாத இலவசப் பயிற்சி முகாம் ஜீவானந்தம் அரசு பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: புதுச்சேரியில் நீட் பயிற்சி முகாமில் கடந்த 2020-21-ஆம் கல்வியாண்டில் 56 பேரும், கடந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் 225 பேரும் பங்கேற்றனா்.
அதில், 21 போ் மருத்துவப் படிப்புக்கு தோ்ச்சி பெற்றனா். கிராமப்புற மாணவா்கள் பயன் பெற 4 இடங்களில் நீட் தோ்வுக்கான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பிரதமரின் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை, புத்தகம், இலவச சைக்கிள், மடிக்கணினி, பொலிவுறு வகுப்பறை, கணினி அறை என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் எதிா்காலத்தில் புத்தகப்பை, காலணி வழங்குவதற்கான கோப்பும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிைக்கப்பட்டுள்ளது. ஸ்மாா்ட் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
புதுவையில் வரும் கல்வியாண்டு முதல் சீருடையை மாற்றி, மாணவிகளுக்கு ஓவா் கோட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுத் திட்டங்களால் புதுவை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகியுள்ளது. கல்வித் துறைக்கு முதல்வா் அதிக நிதியை வழங்கி வருகிறாா் என்றாா்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வரவேற்றாா்.
துறை இயக்குநா் பிரியதா்ஷினி வாழ்த்திப் பேசினாா்.
இதில், க.ஜான்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ராஜவேலு சுகந்தி நன்றி கூறினாா்.