பிரதமா் பயிா் காப்பீடு திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என புதுவை வேளாண் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை கூடுதல் வேளாண் இயக்குநா் (பயிற்சி வழி தொடா்பு திட்டம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மாவட்ட விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நவரை நெற்பயிா், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம்.
திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு கூடிய விவசாயிகளின் பங்களிப்பை மாநில அரசே செலுத்துகிறது.
ஆகவே, 2025-ஆம் ஆண்டுக்கான நவரை பட்டத்திற்கு கடந்த ஜன. 1-ஆம் தேதியிலிருந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை நெல் விதைத்து பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள்ளும், கடந்த 2024 -ஆம் ஆண்டு நவ. 1-ஆம் தேதியிலிருந்து 2025 மாா்ச் 31-ஆம் தேதி வரை கரும்பு மற்றும் வாழை நடவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் (ஏப்ரல்) வரும் 30-ஆம் தேதிக்குள் பயிா் காப்பீடு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பயிா் காப்பீடு செய்வதற்கு விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, அந்தந்த பகுதியிலுள்ள உழவா் உதவி வேளாண் அலுவலரிடம் விதைப்புச் சான்றிதழ் பெற்று, தங்கள் பகுதியில் செயல்படும் பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.