ITR filing 2025: நாளை தான் கடைசி நாள், தவறினால் அபராதம் - நீங்களே ஃபைல் செய்வது ...
அறநிலையத் துறை நிதியில் திருமணங்கள்! இபிஎஸ் மீது துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!
அறநிலையத் துறையின் நிதியைப் பயன்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புவது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்.
சென்னையில் அறநிலையத் துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கும் நிகழ்ச்சி, சென்னை கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
``சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று கல்லூரிகளைத் திறந்தால், கோயில் நிதியில் ஏன் கல்லூரியைத் திறக்கிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.
அறநிலையத் துறையின் நிதியை, குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்தக் கூடாது; அது எப்படி நியாயம்? என்றும் கேட்கிறார்.
ஆனால், அறநிலையத் துறையின் பணம் - மக்களுக்குத் தான் சொந்தம் என்றும், கல்விக்குப் பயன்படுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இன்று, அறநிலையத் துறையின் சார்பில் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதிலும், அறநிலையத் துறை நிதியை எப்படி திருமணங்களுக்குப் பயன்படுத்துவீர்கள் என்று கேட்பார்போல'' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!