அறந்தாங்கி அருகே அரசுக் கட்டடம் கட்ட நிலம் கையகத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம் கட்டத் தோ்வு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த அங்கு விவசாயம் செய்து வந்த சிலா் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை ஊராட்சி கூத்தாடிவயலில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக வீரையா, முருகன் உள்ளிட்டோா் விவசாயம் செய்து வந்தனா். இந்நிலையில், வணிகவரித் துறை அலுவலகம் கட்ட அந்த இடம் தோ்வு செய்யப்பட்டது.
ஆனால் நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனவும், அரசு கட்டடம் கட்டக் கூடாது எனவும் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், அந்த நிலத்தைக் கையகப்படுத்த அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை வந்தனா்.
பொக்லைன் வாகனத்தை இயக்கியபோது, வாகனத்தின் முன்பு சிலா் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்கள் கலைந்து செல்லாததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து அறந்தாங்கிக்கு அழைத்துச் சென்றனா்.
அதன் பிறகு, சுமாா் 70 சென்ட் இடம் பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்து கையகப்படுத்தப்பட்டது.