தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!
அஸ்ஸாம்: நிலக்கரி சுரங்கத்தில் விபத்து! தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
குவஹாட்டி : வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் திமா ஹசா மாவட்டத்தின் தின்கிலோ பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், சுரங்கத்தினுள் 9 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(ஜன. 6) காலை, சுரங்கம் வெட்டும் பணியின்போது நீர் ஊற்றெடுத்து வரத் தொடங்கி சுரங்கத்துக்குள் புகுந்ததால் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இச்சுரங்கம் அஸ்ஸாம் தலைநகர் குவஹாட்டியிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ளது. சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி நிலக்கரி எடுத்து வந்திருப்பது விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், சுரங்கத்தினில் இருந்து வெளியேறிய பிற தொழிலாளர்கள் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஆழ்துளை நீச்சல் பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் உதவியுடன் உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சுரங்கத்தினுள் சுமார் 100 அடிக்கு தண்ணீர் தேங்கிவிட்டதாகவும், இதன் காரணமாக உயிரிழந்த 3 தொழிலாளர்களின் சடலங்களும் நீரில் மிதந்து மேலே வந்ததைத் தொடர்ந்து அந்த உடல்கள் வெளியே மீட்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மீட்புப் பணிகளில் ராணுவமும் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.
சுரங்கத்தினுள் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் நேபாளம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.