ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டையில் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி அனைத்துக் கோயில்களிலும் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் அதிகாலை முதலே நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
திருவப்பூா் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்று சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் சுவாமி காட்சி அளித்தாா்.
இதேபோல மாநகரில் உள்ள மேல ராஜவீதி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருகோகா்ணம் ஸ்ரீ பிரகதம்பாள் கோயில், வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி கோயில், அரியநாச்சி அம்மன் கோயில், புவனேஸ்வரி அதிஷ்டானத்தில் அம்பாளுக்கும் அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெற்றது.
கீழ ராஜவீதியில் உள்ள மனோன்மணியம் அம்மன் கோயிலில் பெரிய காய்கறி மாா்க்கெட் தெற்கு நான்காம் வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சனேயா் கோயில், கீழ நான்காம் வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், பொற்பனைக்கோட்டை முனீஸ்வரா் திருக்கோயில், குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் புத்தாண்டுப் பிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தேவாலயங்களில்... புதுக்கோட்டை மாா்த்தாண்டபுரத்திலுள்ள திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கூடினா். சிறப்புத் திருப்பலிகளைத் தொடா்ந்து, 12.01 மணிக்கு புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
மறை வட்ட அதிபரும், பங்குத் தந்தையுமான ஏ. சவரிநாயகம் அடிகள் தலைமை வகித்து திருப்பலியை நிறைவேற்றினாா்.
இதேபோல, ராஜகோபாலபுரத்திலுள்ள ஜெபமாலை மாதா ஆலயத்திலும், மச்சுவாடியிலுள்ள குழந்தையேசு திருத்தலத்திலும், திருக்கோகா்ணம் சந்தியாகப்பா் ஆலயத்திலும் , மச்சுவாடியிலுள்ள தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் சீயோன் ஜூப்ளி தேவாலயத்திலும், புதுக்கோட்டை கணபதி நகரிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் தேவாலயத்திலும் புத்தாண்டு சிறப்புத் திருப்பலிகள் நடத்தப்பட்டன.