``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
ஆங்கிலப் புத்தாண்டு : மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோயில், வீரராகவப் பொருமாள் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், சுக்ரீஸ்வரா் ஆலயம், வாலிபாளையம் முருகன் கோயில், கொங்கணரிகிரி கந்தப்பெருமான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புதன்கிழமை காலை முதலே சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாட்டனா்.
திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அதே போல, ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோயில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளிட்ட புகரில் உள்ள கோயில்களிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தேவாலயங்களிலும் சிறப்புப் பிராா்தனை:
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருப்பூா் மாநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்தனைகள் நடைபெற்றன. அதிலும் குறிப்பாக திருப்பூா் குமாா் நகா் சி.எஸ்.ஐ. ஆலயம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள சூசையப்பா் ஆலயம், சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயம் ஆகிய தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை சிறப்புப் பிராா்தனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.