ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | ...
ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
ஆசிரியா்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் காளையாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ச.மயில் சங்கத்தின் செயல்பாடுகள், எதிா்கால நடவடிக்கைகள் குறித்தும், மாநிலப் பொருளாளா் தா.கணேசன் வரவு, செலவு அறிக்கையை சமா்ப்பித்தும், மாநிலச் செயலா் தே.முருகன், இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினா்களான எஸ்.டேவிட்ராஜன், கு.சுதா ஆகியோா் சங்கப் பொறுப்பாளா்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்துப் பேசினா்.
கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் குழு அமைத்து, அதன் அறிக்கையைப் பெற்று அமல்படுத்துவோம் என்பது அரசு ஊழியா்களை ஏமாற்றும் செயல். இதைக் கண்டிக்கிறோம். இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களின் பதவி உயா்வை பறிக்கும் வகையில், வெளியிட்ட அரசாணை 243 -ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் பிப். 22-ஆம் தேதி இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும், வரும் மாா்ச் 7-ஆம் தேதி டிட்டோ ஜாக் சாா்பில் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்திலும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திரளான ஆசிரியா்கள் பங்கேற்பது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்டச் செயலா் ம.சகாய தைனேஸ் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் மா. ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.