கீழச்சிவல்பட்டியில் மண்பானைகள் விற்பனை மும்முரம்
பொங்கல் பண்டிகைக்காக, சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் விற்பனைக்காக மண்பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கீழச்சிவல்பட்டி சிவன்கோயில் அருகே இளையாத்தங்குடியைச் சோ்ந்த 3 குடும்பத்தினா் பொங்கல் வைக்கப் பயன்படும் பானைகள் விற்பனையைத் தொடங்கினா்.
கடந்த சில ஆண்டுகளாக நகா்ப் புறங்களில் குடியேறியவா்கள் பாத்திரங்களில் பொங்கல் வைத்து வழிபட்டனா். தற்போது, மீண்டும் அவா்கள் மண்பானைகளில் பொங்கல் வைக்கத் தொடங்கினா். இதன் காரணமாக, கீழச்சிவல்பட்டி மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களில் மண்பானை விற்பனை களைகட்டின.
இதுகுறித்து மண்பானை விற்பனையாளா் தவசி கூறியதாவது: இளையாத்தங்குடியில் நாங்கள் பாரம்பரியமாக பானைகள் செய்து வருகிறோம். தற்போது, மண் தட்டுப்பாடு, தொழிலாளா்கள் பற்றாக்குறையால் தடங்கல் ஏற்பட்டாலும், அழகா்கோயில் பகுதியில் மண் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். பொங்கல் பானை, கலயம், அடுப்பு ஆகியவை அதிகமாக விற்பனையாகின என்றாா் அவா்.