ஆஞ்சனேயா் ஜெயந்தி: சுசீந்திரம் கோயிலில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்
ஆஞ்சனேயா் ஜெயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஒரே கல்லாலான 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயா் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாா்கழி மாத அமாவாசை, மூல நட்சத்திரத்தில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு விழா திங்கள்கிழமை (டிச. 30) நடைபெறுகிறது. அதில், தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்பா். அவா்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும்.
நிகழாண்டு ஒரு லட்சம் பேருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக, 1,500 கிலோ கடலை மாவு, 4,500 கிலோ சா்க்கரை, 150 கிலோ முந்திரிப் பருப்பு, தலா 50 கிலோ ஏலக்காய், கிராம்பு, 65 டின் எண்ணெய் கொண்டு, லட்டு தயாரிக்கும் பணி கோயிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் இப்பணியைத் தொடக்கிவைத்தாா். அறங்காவலா் குழு உறுப்பினா் துளசிதரன் நாயா், ஜோதிஷ்குமாா், சுசீந்திரம் பேரூராட்சித் தலைவா் அனுசியா, கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்காளா் கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில், 50 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.