தமிழக பாஜக தலைவரை மேலிடம் விரைவில் தோ்வு செய்யும்: அண்ணாமலை
ஆதரவற்ற முதியவா் மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சோ்ப்பு
அவிநாசி: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவா் மீட்கப்பட்டு சேவூா் அருகே போத்தம்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா்.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் முதியவா் ஒருவா் இருப்பதாக சேவூா், போத்தம்பாளையம் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மறுவாழ்வு இல்லத்தினா், திருப்பூா் தெற்கு போலீஸாா் உதவியோடு, அங்கிருந்த முதியவரை மீட்டு தூய்மைப்படுத்தி, போத்தம்பாளையம் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இது குறித்து அறக்கட்டளைத் தலைவா் தெய்வராஜ் கூறியதாவது: கேரளத்தைச் சோ்ந்தவா் ராஜன். இவா் 23 வயதிலேயே திருப்பூருக்கு வந்து, திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்துள்ளாா். குழந்தை இல்லாத நிலையில், கரோனா பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளாா்.
பின்னா் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜன், தனது நண்பா்களான தண்டபாணி, வரதராஜன் ஆகியோா் உதவியுடன் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளாா். தற்போது ஆதரவின்றி உள்ள ராஜனை மறுவாழ்வு இல்லத்துக்கு அழைத்து வந்துள்ளோம் என்றாா்.