ஆபத்தை ஏற்படுத்தும் க்ரீம்கள்! சருமப் பராமரிப்புக்கு இந்த 3 மட்டுமே போதும்!
சருமப் பராமரிப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிடுவதை பின்பற்ற வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
சமூக ஊடகங்கள், இன்று நம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அறிவுரைகள் வழங்குவது என பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் தங்கள் கருத்துகளை பகிர்கின்றனர். அந்த கருத்துகளை பலரும் பின்பற்றவும் முயற்சிக்கின்றனர். இது ஆரோக்கியமான விஷயமல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில் சருமப் பராமரிப்பு குறித்து பலரும் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர்.
சமூக ஊடகங்களில் அனைவரும் தங்களை மருத்துவர்களாகவே கருதுகின்றனர். ஒவ்வொருவரின் சருமத்திற்கு ஏற்பவே பராமரிப்பு முறைகள், சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சமூக ஊடகங்களின் தாக்கத்தினால் தோல் பராமரிப்பு முறைகள் மிகவும் சிக்கலாகிவிட்டன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும் சருமப் பராமரிப்பு என்பது மிகவும் எளிமையானது என்றும் பலரும் அதை சிக்கலாக்கிக் கொள்வதாகவும் கூறும் நிபுணர்கள் சருமப் பராமரிப்பு குறித்து வழிமுறைகளைக் கூறுகிறார்கள்.
சருமப் பாதுகாப்பு தேவை
தற்போது சந்தையில் இருக்கும் பல சருமப் பராமரிப்பு பொருள்கள் தேவையற்றவை. அவற்றின் மூலமாக சருமம் மெருகேறினாலும் இப்போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும் எதிர்காலத்தில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கின்றனர்.
நம் உடலில் உள்ள தோலைவிட, முகத்தில் உள்ள தோல் மிகவும் மெல்லியதாக மென்மையானதாக இருக்கும். அதிலும் ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது. எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு உகந்த சோப்புகள்/ கிளென்சர்கள் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்காது.
3 முக்கிய விஷயங்கள்...
சருமப் பராமரிப்புக்கு 3 முக்கிய விஷயங்கள் உள்ளன.
1. மென்மையான கிளென்சர் - முகத்தை சுத்தப்படுத்துவதற்கு
2. மாய்ஸ்சரைசர் - முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தேவை.
3. சன்ஸ்கிரீன் - குறைந்தபட்சம் எஸ்பிஎஃப் 30 சன்ஸ்கிரீன் போதுமானது.
சருமப் பராமரிப்பு பொருள்களை அதிகம் பயன்படுத்தினாலோ ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை பயன்படுத்தினாலோ அது சருமத்தை எரிச்சலடைய வைக்கும். எனவே, இந்த 3 பொருள்கள் போதுமானது.
அடுத்து முகத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது முக்கியம் என்று கூறுகிறார்கள்.
ஏனெனில் பெரும்பாலான தோல் /சருமப் பிரச்னைகள் சூரியனில் இருந்து வரும் யுவி கதிர்களால் வருகின்றன. சுருக்கங்கள், முகப்பரு, முகப்பரு வடுக்கள் போன்றவை சூரியக் கதிர்களால் மோசமடைகின்றன.

க்ரீம்கள் - ஆபத்து
சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க பல க்ரீம்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. 'வயதான தோற்றத்தைக் குறைக்கும், இளமையாக இருக்க உதவும்' என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன.
உண்மையில் வயதாகும்போது, நம்முடைய தோலில் கொலாஜன் உற்பத்தி குறைகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது.
ஒருவர் 30 வயது வரை இந்த சரும தயாரிப்பு பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தினால் இளம் வயதிலேயே சருமப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
சருமத்தில் இறந்த சருமத்தை அகற்றுதல் சருமப் பராமரிப்புக்கு உதவும். ஆனால் பீட்ஸ்(மணிகள்), உப்பு, சர்க்கரை கலந்த சருமப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம். பதிலாக, ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் அல்லது பீட்டா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் கொண்ட தயாரிப்புகளை முயற்சிக்கலாம். இவற்றைப் கண்டிப்பாக சன்ஸ்க்ரீனுக்குப் பிறகேபயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக சலூன்களில் அதிக ரசாயனம் கொண்ட சருமப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் கவனம் தேவை.
அடுத்து சமூக ஊடகங்களில் பலரும் பரிந்துரைக்கும் தோல் பொருள்களை தோல் மருத்துவரின் அறிவுறுத்தலின்றி பயன்படுத்த வேண்டாம்.
சரும மாஸ்க்குகள்
தற்போது சருமத்திற்கான மாஸ்க்குகள் பிரபலமாக இருக்கின்றன. சில ரெட் -லைட் தெரபி மாஸ்க்குகள் உள்பட சில ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது சருமத்திற்கு உதவலாம். ஆனால் சருமத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்ப வேண்டாம்.
அதேபோல விலை உயர்ந்த சருமப் பராமரிப்பு தயாரிப்புகள்தான் நன்றாக வேலை செய்யும் என்பதும் உண்மையல்ல.
விலை, பிரபலமான தயாரிப்பு என்று இல்லாமல் உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எந்த தயாரிப்புகளை உங்கள் சருமம் ஏற்றுக்கொள்கிறதோ (தேவைப்பட்டால் தோல் நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி) அவ்வாறான சருமத் தயாரிப்புகளை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
what dermatologists are saying about your skin care routine: Keep it simple
இதையும் படிக்க | கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?