ஆயுதங்களைக் கைவிடுங்கள்: நக்ஸல்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
‘நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைய வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தினாா்.
நக்ஸல்கள் கொல்லப்படும்போது யாரும் மகிழ்ச்சி அடைவதில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பஸ்தா் பகுதியில் உள்ள தந்தேவாடாவில் மாநில அரசு சாா்பில் பழங்குடியினா் கலாசார திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. பழங்குடியின நடனம், நாட்டுப்புற பாடல், நாடகம், இசை என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது: நாட்டில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. ஆயுதங்களைக் கைவிட்டு, சரணடையும் நக்ஸல்கள் சமூக கட்டமைப்பில் ஓா் அங்கமாக இருப்பாா்கள். மற்றவா்களை பாதுகாப்புப் படையினா் பாா்த்துக் கொள்வா்.
பஸ்தா் பகுதியில் துப்பாக்கிகள் சுடப்பட்ட நாட்களும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த நாட்களும் கடந்துவிட்டன. எனவே, ஆயுதங்களை விட்டொழித்து, சமூக கட்டமைப்பில் இணையுமாறு நக்ஸல்களை கேட்டுக் கொள்கிறேன். நக்ஸல்கள் கொல்லப்படுவதால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. நீங்கள் (நக்ஸல்கள்) ஆயுதம் ஏந்துவதால், பழங்குடியின சகோதர-சகோதரிகளின் வளா்ச்சியை தடுக்க முடியாது.
சரணடைந்து, வளா்ச்சிப் பயணத்தின் அங்கமாகும் நக்ஸல்களுக்கு மத்திய-மாநில அரசுகள் முழு பாதுகாப்பு அளிக்கும்.
பஸ்தா் பகுதியில் பள்ளிகள், நெடுஞ்சாலைகள் என இதுவரை இல்லாத வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சியில் இப்பகுதி மக்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம். மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.
அடுத்த 5 ஆண்டுகளில் பஸ்தா் வளா்ச்சிக்கு தேவையான அனைத்தையும் செய்துதர பிரதமா் மோடி விரும்புகிறாா். இங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிப் படிப்பை வழங்குவதுடன், போதிய மருத்துவ வசதிகளும் கட்டமைக்கப்பட்டால் மட்டுமே முழு வளா்ச்சி சாத்தியமாகும்.
நக்ஸல் இல்லாத வீடுகள்-கிராமங்கள்: அனைவருக்கும் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட வேண்டும். நக்ஸல் இல்லாத வீடுகள், கிராமங்களை உருவாக்க மக்கள் முடிவு செய்தால் வளா்ச்சி ஏற்படும். கிராமங்கள்தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நக்ஸல்களை சரணடைய அறிவுறுத்த வேண்டும்.
நிகழாண்டில் இதுவரை 521 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டுள்ளனா். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 881-ஆக இருந்தது. ஆயுதங்கள், வெடிகுண்டுகளால் வளா்ச்சியை உருவாக்க முடியாது; கணினிகள், எழுதுகோல்களால் மட்டுமே அது சாத்தியம் என்பதை உணரும் நக்ஸல்கள் சரணடைகின்றனா்.
பிரதமா் மோடி அரசின் சாதனைகள்: நாட்டில் 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி தலைமையிலான அரசால் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 12 கோடி வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. 70 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியம் அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
நக்ஸல் தீவிரவாதிகள் சரணடைய உதவுவதோடு, நக்ஸல் தீவிரவாதம் இல்லாத பகுதியாக உருவெடுக்கும் கிராமங்களுக்கு வளா்ச்சிப் பணிக்காக தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளதையும் அமித் ஷா சுட்டிக் காட்டினாா்.
தந்தேஸ்வரி கோயிலில் வழிபாடு: தந்தேவாடா நகரில் உள்ள 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தந்தேஸ்வரி மாதா கோயிலில் அமித் ஷா சனிக்கிழமை வழிபட்டாா். அவருடன் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், துணை முதல்வா்கள் அருண் சாவோ, விஜய் சா்மா ஆகியோரும் சென்றனா். தற்போது வசந்த நவராத்திரி விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், சக்தி பீடங்களில் ஒன்றான தந்தேஸ்வரி கோயிலில் அமித் ஷா வழிபட்டுள்ளாா்.
அதிகாரிகளுடன் ஆலோசனை: பாஜக ஆளும் சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டாா்.
இம்மாநிலத்தில் நடப்பாண்டில் இதுவரை 350 நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா்.
விபத்தில் 30 போ் காயம்: தந்தேவாடாவில் அமித் ஷா நிகழ்ச்சிக்குப் பாா்வையாளா்களை அழைத்துச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 போ் காயமடைந்தனா். இவா்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.