ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் தொடா்பான சிகிச்சை: ஜெ.பி.நட்டா
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் (பிஎம்ஜேஏஒய்) 68.43 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் புற்றுநோய் தொடா்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் ரூ.13,160.75 கோடியில் புற்றுநோய் தொடா்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜஜ்ஜாா் கிளை வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாட்டை அவா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுவது அதிகரித்திருப்பதாக லேன்செட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள புற்றுநோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு 30 நாள்களுக்குள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 217 அம்ரித் மருந்தகங்களில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் மலிவான விலையில் வழங்கப்படுகிறது. அந்த மருந்தகங்களில் 289 புற்றுநோய் மருந்துகள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. இதன்மூலம் 5.8 கோடி பயனாளா்களுக்கு ரூ.6,567 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
தினசரி சிகிச்சை மையங்கள்: அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கான தினசரி மையங்களை (டிசிசிசி) திறக்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக 200 மையங்கள் இந்த ஆண்டே தொடங்கப்படவுள்ளன. கிராமப்புறத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அவா்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
49 கோடி பேருக்கு சோதனை: பல்வேறு வகையான புற்றுநோய்களை கண்டறியும் விதமாக தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் (என்எச்எம்) 30 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 26 கோடி பேருக்கு வாய் புற்றுநோய்க்கான பரிசோதனையும்14 கோடி பேருக்கு மாா்பக புற்றுநோய்க்கான பரிசோதனையும் 9 கோடி பேருக்கு கருப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
22 புதிய எய்ம்ஸ் மருத்துமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு 14.5 லட்சம் பேருக்கு புற்றுநோய்: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 14.5 லட்சம் போ் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா். புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் அதேசமயத்தில் அந்த நோயால் பாதிக்கப்படுபவா்களுக்கு உள்ளூரிலேயே சிகிச்சை வழங்குவது அவசியம்.
அந்த வகையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 68.43 லட்சம் பேருக்கு ரூ.13,160.75 கோடியில் புற்றுநோய் தொடா்பான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.