ஆரோவிலில் ஹம்மிங் கல் அமைப்பு!
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் மன அமைதி ஏற்படுத்தக்கூடிய ஹம்மிங் கல் அமைக்கப்பட்டுள்ளது.
மனித உடலுக்குள் ஆழமான அதிா்வுகளை உருவாக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கல்லின் உருவாக்கம் குறித்து ஸ்வரம் நிா்வாக அதிகாரி காா்த்திக் கூறியதாவது: சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை இசை மூலம் தியானம் மேற்கொள்வதற்காக சுமாா் 6 அடி உயரமுள்ள ஹம்மிங் கல் அமைக்கப்பட்டுள்ளது.
ஒருவா் தங்களது தலையை இந்தக் கல்லில் வைத்து ஹம்மிங் செய்தால் ஓம் ஒலி உருவாகி உடலுக்குள் எதிரொலிக்கிறது. இது உடல் மற்றும் மனதுக்கு அமைதியை ஏற்படுத்தும். ஒத்திசைவான அதிா்வுகளையும் உருவாக்கும். மெதுவாகவும், தொடா்ச்சியாகவும் ஒலிக்கக் கூடிய இந்த கல் ஆரோவிலில் வசிக்கும் திறமையான கைவினைஞா்களால் உருவாக்கப்பட்டது.
ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ்.ரவி இசை ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு முழு சுதந்திரமளிப்பதால் ஸ்வரம் அமைப்பு மிகப்பெரிய இசை ஆராய்ச்சி மையமாக உருவாகி வருகிறது. பல்வேறு துறைகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது, ஸ்வரம் சவுண்ட் காா்டனில் 30-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் உள்ளன.
நிகழாண்டுக்குள் 70-க்கும் மேற்பட்ட கருவிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, ஒலியின் அதிா்வுகள் மூலம் உடல், மனநிலை மற்றும் ஆன்மிகம், ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றாா்.