``ப்ரியா பவானி சங்கருக்கு அப்போல்லாம் திரைப்படங்கள்ல நடிக்கிற ஆசையில்ல'' - நடிகர் ஈஸ்வர்
`ஆபீஸ்', `கல்யாணப் பரிசு', `தேவதையைக் கண்டேன்' போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். அவரைச் சந்தித்து அவருடைய சின்னத்திரை அனுபவங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேசினோம்.

பேசத் தொடங்கிய அவர், ``ஆண் நடிகர்கள் மீடியா துறையில நிலைத்தன்மையை கையாள்வது கஷ்டமான விஷயம். எனக்கு சைட் பிசினஸ் எதுவும் கிடையாது. கடந்த 15 வருடங்களாக நான் நடிகராக மட்டும்தான் இருக்கேன். இப்போ போட்டிகளும் அதிகமாகியிருக்கு. சமூக வலைதளப் பக்கங்கள்ல இன்ஃப்ளூயன்சர்ஸ் அதிகமாக வந்துட்டாங்க. நம்மளோட நிலைத்தன்மையை தக்க வச்சுக்க நம்ம சமூக வலைதளப் பக்கங்கள்ல ஆக்டிவா இருக்கணும். இதை நான் ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கமாட்டேன்.
இங்க இருக்கிற பல ஆர்டிஸ்ட்கள் இப்போ அதனால வேலையில்லாமல் இருக்காங்க. இப்போ சின்னதிரை நடிகர் சங்கத்துல நாங்க பதிவு பண்ணின நடிகர்களே மொத்தம் 2300 நபர்களுக்கு மேல இருக்கோம். அதுல பாதி பேருக்கு இப்போ வேலை இல்ல. நான் என்மேல வச்சிருக்கிற நம்பிக்கைனாலதான் இத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கேன். என்னுடைய நண்பர்கள் சிலரே `நான் நடிச்சால் ஹீரோ கேரக்டர்லதான் நடிப்பேன்'ன்னு எண்ணத்துல இருக்காங்க. நான் ஹீரோவாக நடிச்சு முடிச்சுட்டு லாக்டவுனுக்குப் பிறகு மற்ற கதாபாத்திரங்களிலும் நடிச்சுக்கிட்டு இருக்கேன். இந்தத் துறையில நம்ம இருந்தாகணும்.

அதுனால தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்." என்றவரிடம் ஆபீஸ் சீரியல் நினைவுகள் பற்றிக் கேட்டோம். அவர், ``ஆபீஸ்தான் என்னுடைய முதல் புராஜெக்ட். அந்த வாய்ப்பும் நான் எதிர்பார்க்காத நேரத்துல கிடைச்சதுதான். நான் அப்போ வேற ஒருத்தருக்காக விஜய் டி.வி-க்குப் போனேன். அங்க ரமணன் சார் என்னைப் பார்த்துட்டு இயக்குநரை சந்திக்கச் சொன்னாரு. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு மறுபடியும் அங்க இருந்து அழைப்பு வந்தது. அப்படிதான் அந்த சீரியலோட பயணம் தொடங்குச்சு. அந்த சீரியல் பல மேஜிக்குகளைப் பண்ணியிருக்கு. சொல்லப்போனால், எப்படி நடிக்கணும்னு சொல்லிக்கொடுத்தது அந்த சீரியல்தான்.
அந்த சீரியலுக்குப் பிறகு விஜய் டி.வி, சன் டி.வி, ஜீ தமிழ்னு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. தொடர்ந்து பயணிச்சுக்கிட்டே இருந்தேன். லாக்டவுன் மட்டும்தான் இதற்கிடையில ஒரே இடைவெளி. மற்றபடி ஓடிகிட்டே இருந்தேன். கடந்த அக்டோபர் மாதத்துல இருந்துதான் சின்ன கேப் எடுத்துருக்கேன். அதேமாதிரி நான் `கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல்ல ப்ரியா பவானி சங்கரோட சேர்ந்து நடிச்சுருந்தேன். அப்போல்லாம் அவங்களுக்கு திரைப்படங்கள்ல நடிக்கிறதுக்கு ஆர்வமில்ல. அதன் பிறகு சினிமாவைத் தேர்ந்தெடுத்து நல்ல இடத்துல இருக்காங்க. அதை நினைக்கும்போது மகிழ்ச்சிதான்." என்றார்.

தன் விவகாரத்துக்குக் கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து பேசிய அவர், `` ஜட்ஜ்மென்ட் எனக்கு சாதகமாக வந்துருக்கு. நான் அப்படி பண்ணலைன்னு நிரூபணமாகியிருக்கு. அதை பிரஸ் நோட்டாகவும் நான் வெளியிட்டிருந்தேன். எனக்கு எல்லா சூழல்களிலும் என்னுடைய பெற்றோரும் நண்பர்களும் உறுதுணையாக இருந்திருக்காங்க.
அவங்க இல்லைன்னா நான் இல்லை." என்றவரிடம் மறைந்த இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா குறித்துப் பேசியவர், மனோபாலா சின்னத்திரை சங்கத்தின் துணை தலைவராக இருந்திருக்கிறார். அதுபோல, நடிகர் ஈஸ்வரும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். மனோபாலா பற்றிப் பேசுகையில், `` எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கார். `நீ பட்டு பட்டுன்னு பேசிடுற.

நீ என்னைக்கும் சாணக்யதனமாக இருக்கணும்'னு சொல்லியிருக்காரு. சினிமாவுல அவர் சந்தித்த அனுபவங்களையும் சொல்லியிருக்காரு. இயக்குநர்களுக்கு அவராகவே தொடர்புகொண்டு `நான் இல்லாமல் படம் பண்றியா தம்பி'னு கேட்பாரு. இதுவே அவர் பல படங்கள்ல ஓரிரு சீன்கள்ல நடிச்சதுக்குக் காரணம். நம்மள பிஸியாக வச்சுக்கணும்னு அவர்கிட்ட இருந்து நான் கத்துகிட்டேன்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.